நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். வில்லனாக துப்பாக்கி அஞ்சான் படங்களுக்கு பிறகு வித்யூத் ஜம்வால் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
மதராஸி படத்தின் பிரமோசனுக்காக சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று அங்கு நடந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தை பிரமோட் செய்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ஆந்திராவில் நடந்த மதராஸி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது தெலுங்கில் உருவான பாகுபலி புஷ்பா ஆர்ஆர் ஆர் போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக செய்து வருகின்றன. பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தெலுங்கில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் சாதித்து வருகின்றன மிகப் பிரமாண்டமான முறையில் படங்களை எடுக்கவும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தாராளமாக செலவு செய்கின்றனர்.
இதுகுறித்து ஆந்திராவில் நடந்த மதராஸி பட விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, தெலுங்கில் தயாரிப்பாளர்கள் ஒரு கன்டென்ட்டை நம்பி விட்டார்கள் என்றால் செலவு செய்ய தயங்க மாட்டார்கள். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நம்பிக்கையாக செலவு செய்து படத்தை மிக பிரம்மாண்டமாக எடுப்பார்கள். அதன் காரணமாகத்தான் தெலுங்கு படங்கள் அதிகமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் படங்களாக இருக்கின்றன.
தெலுங்கில் வரும் அடுத்தடுத்த பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் கன்டென்டை நம்பி தாராளமாக செலவு செய்வதுதான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும் ஒரு சிலர் எதிர்மறை விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக வசூலை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படங்கள் பான் இந்தியா படங்களாக இருக்கின்றன. அதில் கமர்ஷியலாக பல விஷயங்கள் இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படங்களாக அவை இருப்பதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் திருப்திப்படுத்தும் படங்கள் தான் அதிகமாக வருகின்றன. அதனால் தமிழில் ரூ.1000 கோடி வசூல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படங்களை உருவாக்கும் போது 1000 கோடி ரூபாய் வசூலை குறி வைக்க முடியாது என்றும் ஒரு தரப்பினர் கருத்துகளை கூறி வருகின்றனர்.





