தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக அமரன் படத்துக்கு பிறகு பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே 23 படம் வெளியாக இருக்கிறது. இறுதிக்கட்டத்தை நோக்கி இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் எஸ்கே 24 படத்திலும், அதைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். வரும் டிசம்பரில் இந்த படங்களில் படப்பிடிப்பு துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 2 படங்களிலும் மாறி மாறி நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோவாவில் கடந்த 20ம் தேதி இந்திய திரைப்பட விழா துவங்கியது. வரும் 28ம் தேதி (நாளை) வரை இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் துவக்க நாளில் ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மட்டுமே தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அவருடன் நடிகை குஷ்பு கலந்துரையாடினார். விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துகிறேன். நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்றால் இணையத்தை உபயோகியுங்கள். ஆனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள்.
அதிலும் குறிப்பாக எக்ஸ் ( டிவிட்டர்) தளத்தை பயன்படுத்தாதீர்கள் என்பது எனது தாழ்மையான அறிவுரை. இதனால் எலான் மாஸ்க் என்னுடைய கணக்கினை முடக்கலாம். அப்படி செய்தால் அதுதான் எனது முதல் வெற்றியாக நினைக்கிறேன். எனது தந்தை மறைவுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை மிகவும் மனம் அழுத்தமாக இருந்தது.
அதனால்தான் நான் மேடைகளில் ஏறினேன். அங்கு கிடைத்த பாராட்டுகளும் கைதட்டல்களும் எனக்கு ஊக்கமளித்தன. எனது அம்மா 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் என்னை விட வாழ்க்கையை நன்றாக அறிந்தவர். குடும்பம் எனக்கு மிகுந்த துணையாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். ஆனால் எக்ஸ் தளத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூறியது ஏன் என்பதுதான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.





