தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்த கருப்பு படம் தீபாவளிக்கு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கிய இந்த படத்தில் சாமியாகவும் வக்கீலாகவும் இரண்டு வித்யாசமான கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த படம் சிங்கம் அயன் போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் தரக்கூடிய படமாக உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குனர் ஆர்ஜே பாலாஜியே இந்த படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அதாவது நேற்று முன்தினம் நடிகர் சூர்யா தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினர். தனது வீட்டின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். மேலும் செல்பி வீடியோவும் அவரே எடுத்த நிலையில் அது இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே சூர்யா பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள், தங்கள் பகுதியில் உள்ள ரசிகர் மன்றங்கள் சார்பில் பலவிதமான உதவிகளை செய்திருக்கின்றனர். அன்னதானம் கோவில்களில் சிறப்பு பூஜை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் நலத்திட்ட உதவிகள் என பல விதங்களில் செலவு செய்து தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
தங்களது சக்திக்கு மீறி பலரும் இப்படி செலவு செய்திருப்பதாக நடிகர் சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமாரின் கவனத்துக்கு இது சென்றிருக்கிறது. உடனடியாக சூர்யா ரசிகர் மன்ற மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசிய நடிகர் சிவக்குமார், எதுக்குப்பா இவ்வளவு செலவு பண்ண விடறீங்க? இதெல்லாம் வேண்டாம்பா என்று அட்வைஸ் கூறியிருக்கிறார்.
மேலும், யார் யாரெல்லாம் இப்படி செலவு செய்தார்கள் என்ற விவரங்களை சேகரித்து, சூர்யாவிடம் சொல்லி அவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளார். தனது மகன் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடியது அன்பின் வெளிப்பாடு என்றாலும், அதற்காக அவர்கள் பொருளாதார சிரமத்தை சந்திக்க கூடாது, பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று ஒரு மனிதாபிமானத்தோடு, தந்தை உள்ளத்தோடு சிந்தித்த நடிகர் சிவக்குமாரின் பெரிய பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.





