- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய ரசிகர் - வலைதள பக்கத்தில் உடனே...

மண்டாடி படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய ரசிகர் – வலைதள பக்கத்தில் உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சூரி. விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த மாமன் படம் இந்த ஆண்டில் பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் மண்டாடி படத்தில் சத்யராஜ் மஹிமா நம்பியார் சாச்சனா நபிதாஸ் ரவீந்திரா விஜய் தெலுங்கு நடிகர் சுகான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கடலில் நடக்கும் மீனவர்களின் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் மண்டாடி படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. சூரியின் திரை வாழ்வில் முக்கியமான படைப்பாக மண்டாடி படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் மண்டாடி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மீனவர்கள் சார்ந்த திரைக்கதை என்பதால் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து நடிகர் சூரி ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மண்டாடி படப்பிடிப்பு துவங்கி கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சினிமா ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சூரியை டேக் செய்து பதிவு ஒன்றை செய்திருக்கிறார். அந்த பதிவில், அன்புள்ள சூரி அண்ணா. எங்கள் ஊரில் உங்களுடைய படத்தின் ஷூட்டிங் நடந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பகுதி மக்கள் இரவு நேரத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும்போது அவர்களிடம் அங்குள்ள பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வையுங்கள். நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கவனித்த நடிகர் சூரி அதற்கு பதில் அளித்துள்ளார். சூரி தனது பதிவில், தம்பி உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தை தயாரிப்பு தரப்பிடமும் தெரிவிக்கிறோம். இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சொல்கிறோம்.

எப்போதும் போல கிடைக்கும் உங்களுடைய அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி என்று சூரி கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரியின் இந்த பண்பான பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகரின் கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்து பதில் அளித்துள்ள சூரியின் இந்த நல்ல குணம் தான் அவரை இந்த அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்