இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியான படம் மாமன். லார்க் ஸ்டுடியோ தயாரித்த இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். விடுதலை கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்த 4வது படம் மாமன்.
இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். அக்கா கேரக்டரில் லப்பர் பந்து நடிகை சுவாசியா நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண் பால சரவணன் பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மாமன் படம் குறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் நடிகர் சூரி கூறியிருப்பதாவது, இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது. இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்கள் அன்புக்கே. வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்.
இந்த படம் முதல் நாளில் எளிமையாக தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு அது ஒரு பெரும் அலை போல பரவியது. இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த பயணம் உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இந்த படம் பிரமாண்ட ஆக்சன் படம் இல்லை.
இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்ன சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால்தான் பலர் நம்ம வாழ்க்கையை போலதான்… மனதை தொட்ட படம் என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச் செய்தது. சக்சஸ் மீட் நடத்தவில்லையா? இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள் சமூக ஊடகப் பதிவுகள் இதுவே நம்ம உண்மையான வெற்றி கொண்டாட்டம்.
மாமன் குழுவிற்கு விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் மீடியா நண்பர்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் நட்பே எனக்கு புதிய உற்சாகம். அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று அந்த பதிவில் நடிகர் சூரி கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





