வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி தான் நடிகர் சூரியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த ஒரே காட்சியில் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் சூரி. அதற்கு பின் பரோட்டா சூரி என்றே டைட்டில் கார்டில் போடப்பட்ட அவர் பிறகுதான் சூரி என மாற்றப்பட்டார்.
பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்து வந்த காமெடி நடிகர் சூரியை திடீரென தனது விடுதலை படத்தில் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிகர் சூரி வாழ்ந்து காட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் போன்ற படங்களில் நடித்த சூரிக்கு கருடன் மற்றும் மாமன் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில் மாமன் படத்தின் கதை திரைக்கதையை நடிகர் சூரியே சொந்தமாக எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மகிமா நம்பியார் சத்யராஜ் போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடல்வெளி பரப்புகளே படத்தின் மையக்களமாக உள்ளது.
இந்நிலையில் அடுத்தாக நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை திருப்பூரை சேர்ந்த இயக்குனர் ரவிக்குமார் டைரக்ட் செய்கிறார். இவர் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியவர். இந்த படத்தை முதலில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சூரி நடிக்கும் 7வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தில் சூரியின் சம்பளம் ரூ. 25 கோடி என்று தெரிய வந்துள்ளது. மாமன் படத்தில் அவரது சம்பளம் 8 கோடி ரூபாயாக இருந்த நிலையில், சூரி சம்பளம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. மண்டாடி படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதால் தனது சம்பளத்தில் 17 கோடி ரூபாய் சூரி உயர்த்தியிருக்கிறார். சூரியின் இந்த சம்பள உயர்வு காரணமாக தான் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு மாறியதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.





