வழக்கமான பாலிவுட் திரையுலகில்தான் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சில நட்சத்திர நடிகர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் பயன்படுத்திய நிலையில், போலீசாரிடம் பிடிப்பட்டதாக தகவல் வெளிவரும். சில நேரங்களில் தெலுங்கு சினிமாவிலும் இதுபோல் ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக தடை செய்யப்பட்ட கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாக கடந்த மாதத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையிலும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டது.
அவரை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். ஆனால் கிருஷ்ணாவுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தவில்லை என்றும், அவர் போதைப் பொளுளை வாங்கி மற்றவர்ளுக்கு சப்ளை செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தினமும் போதைப் பொருள் விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கிய நிலையில், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கொகைன் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா இருவரும் பிடிப்பட்ட பிறகு போலீசார் இதுகுறித்த விசாரணை மற்றும் ஆய்வுகளை அதிகரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை கண்காணிப்பு மற்றும் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 2.5 ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தி வந்திருக்கிறார். சினிமாவில் படங்கள் வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் மனைவியுடன் பிரச்னை, குழந்தைகள் உடல் நலம் பாதிப்பு என பலவிதமான மன அழுத்தம் காரணமாக போதைப் பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்த் போலீசார் விசாரணையில் அழுதபடி கூறியிருக்கிறார்.





