தமிழ் சினிமாவில் மெரினா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து மனம் கொத்திப் பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ காக்கி சட்டை வேலைக்காரன் என பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
ஒரு கட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார். அதன்மூலம் சில படங்களையும் அவர் தயாரித்தார். மேலும் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் பெரும்பாலும் எஸ்கே என்றுதான் சுருக்கமாக அழைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டில் வெளியான அயலான் படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய திருப்புமுனையை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் அந்த கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய புகழை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு லாக் டவுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த டைட்டில் உறுதி செய்யப்படவில்லை, இந்த படத்தை பர்ஸ்ட் காபி அடிப்படையில் ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நாயகனாக நடித்து வரும் சந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு வீடியோ கிளிம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் நாயகன் நடிகர் சந்தீப் கிஷன் பெயரை சுருக்கி எஸ்கே என குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு எஸ்கே என நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இருக்கிறார். இப்போது இன்னொரு எஸ்கே எதற்கு என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





