தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில், வசனம் இல்லாமல் கேரக்டர் இல்லாமல் நடித்தவர்தான் நடிகர் சூரி. குறிப்பாக தீபாவளி படத்தில் சில காட்சிகளில் சூரி நடித்திருப்பார். அதேபோல் வின்னர் படத்திலும் சூரி சில காட்சிகளில் தென்படுவார். குறிப்பாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் மேன்ஷன் ரூமில் பரத்திடம் பாத்ரூம் அருகே பேசும் கேரக்டரில் சூரி நடித்திருப்பார்.
ஆனால் அப்போதெல்லாம் அது நடிகர் சூரி என்று தெரியாத அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் அறிமுகம் இல்லாத ஒரு கலைஞனாக தான் இருந்தார். இப்போது அந்த படங்களை பார்க்கும் போதுதான் அதில் சூரி நடித்திருப்பதே ரசிகர்களுக்கு தெரிய வரும். இதேபோன்றுதான் விஜய் சேதுபதியும் ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக சில படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவரை திடீரென கதாநாயகனாக மாற்றி, அவரது திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கிய விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக சூரியை அந்த கேரக்டராகவே வாழ வைத்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியிலும் காமெடியன் சூரியை காண முடியாத அளவுக்கு ஒரு புது நடிகரைப் போல் நடிக்க வைத்திருந்தார் வெற்றிமாறன்.
இந்நிலையில் சூரி நடித்த விடுதலை படம், மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவது படமாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் கருடன் படம் வெளியானது. அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூரி ஒரு சிறந்த கதாநாயகன் என்ற இடத்துக்கு கொண்டு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக கொட்டுக் காளி என்ற படமும் சூரி நடிப்பில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50வது படமாக மகாராஜா படம் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களின் பலத்த ஆதரவு வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை காமெடி நடிகராக இருந்த நடிகர் சிங்கம் புலி, மகாராஜா படத்தில் வேற லெவலில் ஒரு நடிப்பை தந்திருக்கிறார். கொள்ளையர் கூட்டத்தைச் சேர்ந்த அவர் டீன் ஏஜ் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
இதுகுறித்து போனில் சிங்கம்புலியை அழைத்து பேசிய நடிகர் சூரி, என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க, நான் உங்க மேல பயங்கர கோவமா இருக்கேன். நான் பதட்டமாகவே வீட்டுக்கு வந்தேன். என் பொண்டாட்டி உங்கள வீட்டுக்கு எல்லாம் இனி கூப்பிட வேணாம்ன்னு சொல்றா. நீங்க பண்ணுனது என்னை நடுங்க வச்சுடுச்சுன்னு சொன்னாரு, என்று சிங்கம் புலி சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறார். பல படங்களில் நடிகர் சூரியும் சிங்கம் புலியும் இணைந்து நடித்திருந்த நிலையில், மகாராஜா படத்தில் சிங்கம்புலியின் அந்த நடிப்பு, நடிகர் சூரி தனது வீட்டுக்கே வர வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெகுவாக பாதித்து இருக்கிறது.





