தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஜாதி உரிமைகள் பேசும் படங்கள் அதிகமாக வருகின்றன. குறிப்பாக மாரி செல்வராஜ் பா ரஞ்சித் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுகிறது. ஜாதி பிரச்னை அதிகார வர்க்கம் உரிமை மீறல் போன்ற பிரச்னைகள் இவர்களின் படங்களின் கதைக்களத்தில் அதிகமாக பேசப்படுகின்றன.
இது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமை பறிப்புகளை கூறும் படைப்புகள் என்று ரசிகர்களில் ஒரு சாரார் பாராட்டினாலும் எப்போதோ நடந்த விஷயங்களை இப்போது திரைப்படங்களாக மக்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் ஜாதிய பிரச்னைகளை தூண்டி மீண்டும் கலவரங்களை உருவாக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, என்னோட 2வது படத்திலேயே இப்போ இருக்கிற இயக்குனர்கள் ஜாதி பற்றிய படங்களில் என்ன சொல்கிறார்களோ அதைவிட சீரியஸா வேற மாதிரி நான் சொல்லி இருப்பேன்.
ஒருகை ஓசை படத்துல சங்கிலி முருகன் ஒரு கேரக்டர். அவர் தாழ்த்தப்பட்டவர். அவரால் மத்தவங்க மாதிரி டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்க முடியாது. அவரோட ஜாதிக்காரங்களும் டீ குடிக்க முடியாது. கடைக்கு வெளியே குத்த வச்சு கொட்டாங்குச்சியில் தான் டீ வாங்கி குடிக்கணும்.
இவர் நைட்ல ஊரை காவல் காத்துகிட்டு இருப்பார். ஒரு சீன்ல பக்கத்து ஊர்க்காரங்க குடிக்கிற தண்ணில விஷம் கலக்க வருவாங்க. இதை அவர் சண்டை போட்டு தடுத்து நிறுத்துவார். ஆனா அவரை கத்தியால குத்திட்டு போய்டுவாங்க. இது தெரிஞ்சு ஊர் மக்கள் அங்கே வந்துவிடுவார்கள். அப்போ ஊர்க்காரங்க எல்லாம் சங்கிலி முருகன் கிட்ட கேட்பாங்க.
உனக்கு என்னடா நாங்க கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை என்று சொல்வார்கள். அப்போ அவர் சொல்லுவாரு, ஒன்னும் செய்ய வேண்டாம். நீங்க உட்கார சேர்ல எங்களையும் உட்கார விடுங்க. நீங்க குடிக்கிற கிளாஸ்ல எங்களுக்கும் டீ கொடுத்து மனுஷனா பாருங்க, அது போதும்ன்னு சொல்லிட்டு இறந்துடுவார். இது போன்ற ஒரு காட்சியை நான் அப்போதே வைத்திருந்தேன் என்று இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.





