தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை தந்தவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை நாச்சியார் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நந்தா படம் சூர்யாவுக்கும், சேது படம் விக்ரமுக்கும் திருப்புமுனையாக இருந்தது.
தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படம் வருகிற தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் வாய் பேசாத கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார். இது நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டர். அவர் வணங்கான் படத்தில் கமிட் ஆகி விலகிய நிலையில், அதே கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.
நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர் சூர்யா, தனது தந்தை சிவக்குமாருடன் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் அருண் விஜய், சிவகார்த்திகேயன் உள்பட பல இயக்குனர்கள், நடிகர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, நந்தா படம் இல்லையென்றால் நான் இல்லை. நந்தா படத்தை பார்த்து விட்டு தான் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அதற்கு அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் கஜினி படத்தில் எனக்கு கிடைத்தது. இது எல்லாவற்றிற்கும் பாலா காரணம் பாலா அண்ணன் தான்.
அதைத் தொடர்ந்து பாலா இயக்கிய சேது படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நடிகர் நடிக்க முடியுமா, இயக்குனர் இப்படி இயக்க முடியுமா என்று 100 நாள் எனக்குள் சேது படத்தின் தாக்கம் இருந்தது. 2000ம் ஆண்டு நெய்க்காரன்பட்டியில் ஷூட்டிங்கில் நான் இருந்த போது எனக்கு ஒரு போன் கால் வந்தது.
அதில் அடுத்த படத்தை உன்னை ஹீரோவாக வைத்து பண்ணுகிறேன் என்று பாலா சார் சொன்ன ஒரு வார்த்தைதான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியது. அருண் விஜய்க்கு வணங்கான் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் என்று நடிகர் சூர்யா பேசி இருக்கிறார். இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





