தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த போது, அதிமுகவில் மிகப்பெரிய பிரளயமே வெடித்தது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழ, கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டார் சசிகலா. அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம், இதையெல்லாம் பிடிக்காமல் ஜெயலலிதாவின் சமாதி முன்பு தியானம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தப் போவதாக பேசினார். சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட, சசிகலா தரப்பினர் அதிமுக எம்எல்ஏக்களை சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள விடுதியில் அடைத்து வைத்தனர்.
அன்றைய தினம் அதிமுகவுடன் கூட்டணியாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் தான் அதிமுக எம்எல்ஏக்களை அங்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தார். இப்படி அதிமுகவின் அழியாத பக்கங்களை இப்போது வரை அரசியலில் பேசிக் கொண்டிருக்க, கட்சியின் முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு கூவத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறி அதில் த்ரிஷாவை இழுத்து அவதூறாக பேசியிருக்கிறார்.
அதிமுகவின் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம், கூவத்தூரில் இருக்கும் போது நடிகை திரிஷா தான் வேண்டும் என்று கேட்டதாகவும், பல நடிகைகள் வந்து போனதாகவும் கூறினார். கருணாஸ் தான் இதனை ஏற்பாடு செய்ததாக பேசிய ஏவி ராஜு, திரிஷாவுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்துவரப்பட்டதாக அவதூறு தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஏவி ராஜுவின் பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படியான சூழலில், அவரைக் கட்சியிலும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து எக்ஸ் வலைதளத்தின் பதிவிட்டுள்ள நடிகை திரிஷா, கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலையிலும் செல்லும் கீழ்த்தரமான மனிதர்களைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. இனிமேல் நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் எனது சட்ட வல்லுனர்கள் மேற்கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திரிஷா குறித்து அதிமுக நிர்வாகி பேசியிருக்கும் இந்த விவகாரம் திரையுலகை மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





