சென்னையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர்கள் கருணாஸ் பூச்சி முருகன் முன்னிலை வகித்தனர். மறைந்த நடிகர் நடிகைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டடது. பழம்பெரும் நடிகை எம்என் ராஜம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் இன்றைய கூட்டத்தில் மத்திய அரசின் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிகை ஊர்வசி மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டனர். மேலும் தாதே சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கும் கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியதாவது, நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞர்கள் சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நம் கலைஞர்களை தவறாக பேசி சின்ன விஷயத்தை பெரிதளவு ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.
இன்னும் நிறைய யூடியூபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். இந்த படத்தைப் பற்றி பேசு அந்த படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலர்தான் இதை செய்கிறார்கள். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கிறார்கள்.
இதனை நடிகர் சங்கத்தில் யாரும் கண்டிப்பதில்லை. இப்படி பேசுவர்களை போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லை என ஆக்க வேண்டும். நடிகர் சங்கம் என்பது நடிகர்களை பாதுகாப்பதுதான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது விமர்சனம் எடுக்கிறார்கள். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்து வருகிறார்கள்.
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்று நான் ஊரில் இல்லை. ஒரு நாள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து வருவேன் என்று நடிகர் வடிவேலு இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில யூடியூபர்கள் மீது நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





