தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. சிறியவர் முதல் பெரியவர் வரை வாய்விட்டு சிரித்து ரசித்து பார்க்கும் நகைச்சுவை காட்சிகளில் தன் வசன உச்சரிப்பால் உடல் மொழியால் முகபாவனைகளால் காமெடியில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. அவரது காமெடிக்காகவே பல படங்கள் அதிக நாட்கள் ஓடியிருக்கின்றன.
நடிகராக மட்டுமின்றி பல படங்களில் பாடியும் இருக்கிறார் வடிவேலு. குறிப்பாக எட்டணா இருந்தா எட்டு ஊருக்கு என் பாட்டு கேக்கும், வாடி பொட்டப்புள்ள வெளியே கட்டுனா அவளை கட்டனும்டா ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு புரிஞ்சுக்கடா என்னோட பிரண்டு என பல பாடல்களை வடிவேலு தனது சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு கூறியதாவது, நிறைய பேர் ஹீரோ ஆகணும் என்று சினிமாவுக்குள் வருகின்றனர். வந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகின்றனர். பாடகராக வேண்டும் என்று வருபவர்களும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிடுகின்றனர். ரொம்ப பேர் பெரிய வில்லனாக வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர் டிராலி தள்ளிக்கொண்டிருக்கிறார்.
ரொம்ப பேரு குணச்சித்திர நடிகராக வேண்டும் என்று வருகின்றனர். அவர் கேமராமேன் ஆகிவிடுகிறார். ஒவ்வொரு ஆளும் அப்படி ஆகி விடுகின்றனர். நான் பெரிய பாடகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சினிமாவுக்குள் வந்தேன். நாலு பாட்டு பாடலாம். சங்கீதம் கத்துக்கலாம் என்றுதான் வந்தேன்.
ஆனால் சங்கீதம் கத்துக்க எல்லாம் நான் போகவில்லை. ஏதோ கிடைக்கிற வேலையை பார்க்கலாம். ஒருத்தன் உள்ளே கூட்டீட்டு வந்துட்டான். முதல் படத்தில் நடிச்சுட்டேன். ராஜ்கிரண் முதல் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் அவர் நடிச்ச பல படங்களில் என்னை நடிக்க வெச்சார். அப்புறம் மக்கள் மத்தியில் நகைச்சுவைக்கு நல்ல மரியாதை வந்துச்சு.
பட் இந்த ஜாப் ரொம்ப நல்லா இருக்கே? ஆனால் என்னுடைய ஜாப் இது கிடையாது. பசங்க கூட வெளியில் போய் எண்டர்டெயின்ட் பண்றது, கூத்தடிக்கிறது கும்மியடிக்கிறதுதான் நம்ம வேலை. இங்க வந்து அதை அப்படியே தொழிலா மாத்திக்கிட்டேன். இதுதான் நான் சினிமாவுக்கு வந்து காமெடி நடிகராக மாறியதற்கு காரணம். ஆனா என் வாழ்க்கை ரொம்ப சீரியஸ் என்று நடிகர் வடிவேலு அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





