தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். குறிப்பாக சின்னத்தாயி செல்லக்கண்ணு கிழக்கு சீமையிலே பொங்கலோ பொங்கல் ஆச்சார்யா ராமன் அப்துல்லா பசும்பொன் சூரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் பெரிய ஹீரோவாக வந்திருக்க வேண்டிய நடிகர் விக்னேஷ் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. ஆனால் செல்லக்கண்ணு சின்னத்தாயி கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் நல்ல இளம் ஹீரோவாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது,
நான் நடித்த சூரி படம் நன்றாக போனது. அப்போது பத்திரிகைகளில் மட்டும்தான் சினிமா விளம்பரம் வரும். இப்போது மாதிரி பிரமோசன்களுக்கு அப்போது வாய்ப்பில்லை. அந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஆகிவிட்டது.
புது தயாரிப்பாளர் அவர். இயக்குனர் அவரிடம் என்னால் தான் உங்களுக்கு பேர் கிடைத்துள்ளது என்று கூறிவிட்டார். இரண்டு பேருமே பணக்காரங்க. ஈகோ பிரச்னை ஆயிடுச்சு. உடனடியாக புரடியூசர் விளம்பரங்களை எல்லாம் கம்ப்ளீட்டா ஸ்டாப் பண்ணிட்டார். 35வது நாள் படம் போயிட்டு இருக்குது. அப்போ எல்லாம் பேப்பரை பார்த்துட்டு தான் தியேட்டருக்கு வருவாங்க.
இந்த தியேட்டரில் இந்த படம் ஓடுதுன்னு அப்போதான் அவங்களுக்கு தெரியும். பேப்பரை பார்த்து தெரிஞ்சுக்கிட்டுதான் வருவாங்க. அப்படியே விளம்பரம் இல்லாததால் படம் பார்க்கற கூட்டமே இல்லாம போச்சு. எவ்வளவோ சொல்லி பார்த்தேன். பேப்பர்ல விளம்பரம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஈகோ வரக்கூடாது. அப்படி ஈகோ வந்ததால் அந்த படம் அப்படியே 2 3 நாள்ல நின்னு போச்சு. அடுத்து ஆச்சாரியா படம் நல்ல படம். என்னுடைய சொந்த படம். அந்த படம் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் சரியாக போகவில்லை. ஈசாவும் ரொம்ப அருமையான படம். அதுவும் சரியாக போகலே. இதுவும் எனக்கு வருத்தத்தை கொடுத்தது என நடிகர் விக்னேஷ் பேசியிருக்கிறார்.





