மதுரையில் உள்ள பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது அரசியல் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, இந்த மாநாட்டில் ஒலிக்கிற குரல் என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒலிக்கிற குரலாக இருக்கிறது. உரிமைகளுக்காக ஒலிக்கிற இந்த உண்மையான குரலை எதிர்க்கிற கூக்குரல்களால் இந்த குரல் ஒலிக்காமல் இருக்காது.
எப்போதுமே என்னுடைய அரசியல் எதிரி திமுகதான். கொள்கை எதிரி பாஜக தான். எந்த அரசியல் கட்சியுடனும் அடிமை கூட்டணி அமைக்கப் போவது இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய அரசியல் இயக்கம் இன்று இருக்கும் நிலைமையை பார்த்து அந்த தொண்டர்களே மனதில் நொந்து போயிருக்கின்றனர். இந்த மாநாட்டில் திரண்டிருக்கும் கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல, திமுகவுக்கு வேட்டாகவும் மாறப் போகிறது.
பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்புதான் எங்கள் நோக்கமே. நெசவாளர்கள் மீனவர்கள் உழைப்பாளர்கள் தொழிலாளர்கள் 3ம் பாலினத்தவர்கள் என மக்களுக்கு ஒரு முழு பாதுகாப்பும் அவர்களது சிறந்த வாழ்வுமே எங்களது நோக்கம். இதில் எந்த சமரசமும் எப்போதும் கிடையாது. மக்கள் நலனே எங்களது நோக்கம்.
ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்ற சொன்னீங்களே ஸ்டாலின் அங்கிள், மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சீங்களா? மக்கள் பாதுகாப்பை பெண்கள் பாதுகாப்பை உறுதி செஞ்சீங்களா? அங்கிள் இது ரொம்ப ராங்க் அங்கிள். மக்கள் இல்லை இல்லை என்று இங்கே சொல்வது உங்கள் காதுகளுக்கு கேட்குதா அங்கிள்?
மதுரையில் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கப் போவது உங்கள் விஜய்தான். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கப் போவது விஜய்தான். நான் அரசியல் துவங்கிவிட்டு மக்கள் வீட்டுக்குள் செல்லவில்லை. மக்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டுதான் அரசியலுக்கே வந்திருக்கிறேன். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் டிவிகே டிஎம்கே என்ற 2 கட்சிகளுக்கு மட்டும்தான் போட்டியாக இருக்கும்.
சினிமாவில் மெஜாரிட்டியை இழந்துவிட்டு மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்குள் நான் வரவில்லை. படை பலத்தோடு வந்திருக்கிறேன். சினிமாக்காரன் என்றால் முட்டாள் இல்லை. காமராஜரை தோற்கடித்தது அரசியல்வாதிதான் சினிமாக்காரன் அல்ல, நல்லக்கண்ணுவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதிதான். வரும் 2026ம் ஆண்டில் தவெக ஆட்சியமைக்கப் போவது உறுதி என்று நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் ஆவேசமாக பேசினார்.





