மதுரையில் உள்ள பாரபத்தியில் இன்று மாலை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்ட இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, ஒரு காட்டில் எத்தனை மிருகம் இருந்தாலும் சிங்கம்தான் அந்த காட்டுக்கு ராஜா. சிங்கம் வேட்டைக்கு போனாலும் சிங்கிளாக போகும். அது கூட்டமாகவும் இருக்கும். தனியாகவும் இருக்கும்.
எப்போதுமே சிங்கம் அதைவிட பெரிய மிருகத்தை தான் வேட்டையாடும். எல்லாத்தையும் தொடாது. பசியாக இருந்தாலும் கெட்டுப் போனதை தொடாது. தன்னை விட பெரிய விலங்கை தான் சிங்கம் வேட்டையாடும். ஆனால் தொட்டால் விடாது. சினிமாவிலும் அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
ஆனால் அவருடைய குணம் கொண்ட இந்த உணர்வுபூர்வமான மதுரை மண்ணில் பிறந்த அண்ணன் விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது. அவருடன் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. தவெகவின் அரசியல் உண்மையானது. உணர்வு பூர்வமானது. நல்லவர்களுக்கானது. நாட்டு மக்களுக்கானது. நல்லதை மட்டுமே செய்யும்.
விக்கிரவாண்டி தவெக மாநாடு, தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாற்றியது. தொடர்ந்து இந்த மாநாட்டில் ஒலிக்கும் என் குரல் ஒற்றைக் குரல் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். நான் கட்சியை ஆரம்பிக்கும் போது பல விமர்சனங்களை எழுந்தன. ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியைப் பிடிப்பாரா என்று சொன்னார்கள்.
யாருக்காகவும் எதற்காகவும் நமக்கு எந்த பயமும் நமக்கு இல்லை. நான் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றும் கட்சி கிடையாது. பாசிச பாஜகவுடன் உறவு வைத்துக்கொள்ள நாம் என்ன உலகமகா ஊழல் கட்சியா? இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மகத்தான வெகுஜன மக்கள் படையை கொண்ட கட்சி. நாம் எந்த அடிமை கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியம் இல்லை. பாசிச பாஜக, பாய்சன் திமுகவுக்கு எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா?
பாஜக என்னதான் திட்டம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்? தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தான் மாஸ் தலைவர். அவர் இருக்கும் வரை சிஎம் பதவியை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எம்ஜிஆர் வரும்வரை முதலமைச்சர் பதவியை நான் வைத்திருந்து பிறகு திரும்பி தந்து விடுகிறேன் என்று தனது எதிரியை எந்த கெஞ்ச வைத்தவர்தான் எம்ஜிஆர் என்று அந்த மாநாட்டில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





