சென்னை வியாசர்பாடியில் உள்ள முல்லை நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு பல குடிசைகள் எரிந்து விட்டன. இந்த சூழலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்த தவெக கட்சி சார்ந்த பெண் நிர்வாகிகளை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்தையில் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதை தடுத்து நிறுத்தியதற்காக காவல்துறையினரை பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும் ஆடையை பிடித்து இழுத்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அராஜகமாக இழிவாக அவர்களை இழுத்து தள்ளிவிடும் காவல்துறையின் செயலை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் மு க ஸ்டாலின் அரசின் இந்த காட்டுமிராண்டித்தனமான அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அராஜக செயலில் ஈடுபட்டு தவறு இழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தபின் அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்கள் இடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதை பலமுறை சுட்டிக்காட்டி உள்ளேன். இப்போது காவல் துறை மூலம் நடந்துள்ள இந்த அராஜக சம்பவம் அதை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறது.
ஆனாலும் காவல்துறை வாயிலாகவும் அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் இந்த போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி அப்பாவிகள் மீது மிருக பலத்தை காட்டி மக்களின் வெறுப்புகளை குவித்து வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு பெண்களின் உரிமைகளை பறித்து அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேபோன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால் தமிழக வெற்றி கழகம் சார்பில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்ட போராட்டத்தையும் முன்னெடுக்க தயங்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.





