கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு கரூரில் வேலுசாமிபுரத்தில் தவெக பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அக்கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்ந்தவர்களை வீடியோகாலில் அழைத்துப் பேசினார். இதையடுத்து அவர் கரூருக்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இமெயில் மூலமாக நேற்று முன்தினம் 7ம் தேதி அனுப்பப்பட்டது. மேலும் நேற்று 8ம் தேதியன்று வழக்கறிஞர் அறிவழகன் தனியாகவும் இந்த மனுவை சமர்ப்பித்தார். அந்த மனுவில் தவெக தலைவர் விஜயின் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட்ட நெரிசலை தவிர்க்க நிபந்தனைகள் மற்றும் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விஜயின் வாகனத்திற்கு அருகில் எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் இரு சக்கர வாகனங்களும் உட்பட வர முடியாத அளவுக்கு போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் மொபைல் ரோந்து அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
திருச்சி விமான நிலையத்தில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடங்களை பாதுகாக்க ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஏற்பாட்டாளர்களும் பாதுகாப்பு குழு மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்தில் ஒரே நுழைவுவாயிலில் நுழைந்து வெளியேறும்படி இருக்க வேண்டும். உள்ளே வரும் நபர்கள் முன்பே பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் அனுமதி சீட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அணுக அனுமதி வழங்கக் கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான மண்டபம் தேடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. வருகிற திங்கட்கிழமை அதாவது 13ம் தேதி நடிகர் விஜய் கரூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜயின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டால் மட்டுமே விஜய் கரூருக்கு செல்ல வாய்ப்புள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி தான் விஜய் இந்த தவெக பிரசார பயணத்தை திருச்சியில் துவங்கினார். அதே13ம் தேதி கரூர் துயர சம்பவத்துக்கு நிவாரணம் அளிக்க செல்லும் சூழல் விஜய்க்கு உருவாகி விட்டதாக தவெக கட்சியினர் கூறுகின்றனர்.





