ஒவ்வொரு அடியையும் நடிகர் விஜய் பார்த்து, பார்த்து கவனமாக எடுத்து வைக்கிறார் என்பதை இன்று நடந்த கட்சி கொடி அறிமுகம், கட்சி கொடியேற்றம் மற்றும் கட்சி பாடல் வெளியீடு விஷயங்களில் தெளிவாக மக்களுக்கு உணர்த்தி விட்டார். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல், சொல்லி அடிக்கும் கில்லியாக அவர் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, கொடியேற்றிய பிறகு கட்சி பாடலை வெளியிட்டார். அதில் கட்சி பாடல் வரிகளுடன் இடம்பெற்ற காட்சிகளில், தனது அரசியல் கொள்கை, நோக்கம், இலக்கு என்ன என்பதையும் அவர் தெளிவாக உணர்த்தி இருக்கிறார். மக்களின் நலனே தனது லட்சியம் என்பதை அவர் அதில் பிரதிபலித்திருக்கிறார்.
கட்சி பாடல் வரிகளை கவிஞர் விவேக் எழுதியதாகவும், இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 3டி கிராபிக்ஸில் இந்த பாடல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. யானையில் வந்து மக்களை துன்புறுத்தும் சிலரை, கையில் வெள்ளிக்காப்பு அணிந்து குதிரையில் வரும் இளைஞர் ஒருவர் இறங்கி வந்து தனது 2 யானைகளை கொண்டு அவர்களை வீழ்த்துகிறார். இந்த காட்சிகளுடன் பாடல் துவங்குகிறது.
தமிழன் கொடி பறக்குது, தமிழன் யுகம் பொறக்குது என்ற பாடல் துவங்கும் முதல் வரியிலேயே இது தமிழ்நாட்டு மக்களுக்கான கட்சி என்பதை சொல்லி விட்டார். மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது என்ற வரிகள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரை குறிக்கிறது.
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது என்ற வரிகள் மூலம் சினிமாவில் கோடி கோடியாக வருமானம் இருந்தும் அதை விட்டுவிட்டு சினிமாவில் இருந்து விலகி, அரசியலுக்கு வந்ததை கோடிட்டு காட்டியிருக்கிறார் நடிகர் விஜய்.
மேலும் பாடலின் இறுதியில் அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலம் இது, தூர நின்று பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது, தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது என மக்களோடு ஒருவனாக நான் இருப்பேன் என்று இதில் குறிப்பிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரு தலைவனாக, எம்ஜிஆர் என்ற மூன்று எழுத்து மந்திரச் சொல்லை போல, விஜய் என்ற மூன்றெழுத்துச் சொல்தான் எனது அரசியல் கொள்கை என்பதை இந்த கட்சி பாடலில் சொல்லி இருக்கிறார் நடிகர் விஜய்.
விஜய் கட்சி பாடலை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்;https://youtu.be/as86Klk5qUE





