இயக்குனர் அட்லி, டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யனாக சினிமா துறையில் நல்ல இயக்குனராக மட்டுமின்றி பெரிய ஸ்டார் இயக்குனராகவும் வலம் வருகிறார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ராஜா ராணி படம்தான் அட்லியின் முதல் படம். பெரிய வெற்றிப் படமாக இருந்தது.
அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை தந்தார். இந்த 3 படங்களே மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இதையடுத்து அட்லி, பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் அழைப்பின் பேரில், இந்தி படவுலகம் பக்கம் சென்றார். ஏற்கனவே பதான் படம் மூலம் 1000 கோடி ரூபாய் வசூலை தந்த ஷாருக்கான், தனது அடுத்த படத்தை இயக்கும் அரிய வாய்ப்பை அட்லிக்கு தந்தார்.
கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என கோலிவுட் நட்சத்திரங்களை ஜவான் படத்தில் களம் இறக்கிய டைரக்டர் அட்லி, தீபிகா படுகோனுக்கும் முக்கிய கேரக்டரை தந்தார். ஜவான் படம் ரிலீசான அன்று முதல் நாளில் 23 படங்களில் காப்பி என விமர்சிக்கப்பட்ட ஜவான், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
மும்பை திரையுலகமே வியந்து பார்த்த அட்லி, இப்போது 40 கோடி ரூபாயில் மும்பையில் தனக்கு அலுவலகம் கட்டியுள்ளார். சொந்த வீடும் வாங்கி விட்டார். உலக பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டு நிகழ்ச்சியிலும் தன் மனைவியுடன் கலந்துக்கொள்கிறார். அடுத்து புஷ்பா 2 படத்தை அடுத்து, அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அதை அட்லிதான் டைரக்ட் செய்கிறார்.
இதற்கிடையே இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் அட்லி களத்தில் உள்ளார். ஏ பார் ஆப்பிள் என தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துள்ள அட்லி, முதலில் தயாரித்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. அடுத்து இந்தியில் எடுக்கப்படும் தெறி படத்தை தயாரிப்பது அட்லிதான். இந்த தெறி இந்தி ரீ மேக் படத்தில் வருண் சர்மா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து இப்போது தமிழில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் அட்லி. இந்த படத்தை டைரக்ட் செய்பவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் பாலாஜி தரணிதரன். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகனாக நடித்தவர்தான். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.





