இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் படையப்பா. இந்த படத்தில் சிவாஜி கணேசன் ரம்யா கிருஷ்ணன் நாசர் செளந்தர்யா லட்சுமி ராதாரவி மணிவண்ணன் செந்தில் ரமேஷ் கண்ணா அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யாகிருஷ்ணன் பெரிய அளவில் பாராட்டு பெற்றார்.
ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளான நாளை 12ம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் படையப்பா படத்தில் நடிகர் விஜய் நடிக்க ஆசைப்பட்ட தகவல் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாப்பிள்ளையாக படையப்பா படத்தில் நடிக்க நடிகர் விஜய் விரும்பியுள்ளார். மேலும் இதை நேரடியாகவே விஜய் ரஜினியிடம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து ரசிகை ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜயிடம் கேள்வி எழுப்பிய போது இதற்கு விஜயே நேரடியாக பதில் தந்திருக்கிறார்.
படையப்பா படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்வியை அந்த ரசிகை கேட்டபோது அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய், படையப்பா படத்தில் என்னை நடிக்க சொல்லி யாரும் கேட்கவில்லை. நானாக தான் கேட்டேன். சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு நிறைய உள்ளது. அதனால் தான் கேட்டேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் படையப்பா படத்தில் விஜய் நடிக்கவில்லை. ஒருவேளை விஜய் நடித்திருந்தால் நாசரின் மகனாக ரஜினியின் மாப்பிள்ளையாக தான் நடித்திருக்க வேண்டும். அதாவது அப்பாஸ் கேரக்டரில் விஜய் நடித்திருக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார் நிராகரித்து விட்டார். அதற்கு காரணம் அப்பாஸ் ஏற்று நடித்தது மிகச்சிறிய கதாபாத்திரம். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அப்பாஸ் வருவார்.
படையப்பா படத்தின் கதையிலேயே சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம்தான் அப்பாஸ் ஏற்று நடித்த மாப்பிள்ளை கதாபாத்திரம். அப்படி இருக்கும்போது அந்த கேரக்டரில் கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய் நடித்தால் அது செட் ஆகாது என்று ரஜினி கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு ரஜினி விஜய் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இப்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.





