தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். விஷால் பிலிம் பேக்டரி என்ற சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் அவரது 35வது படம் மகுடம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நடிகர் விஷால் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி விநாயகர் கோவிலில் சுவாமி வழிபாடு நடத்திய பின் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவர்களுடன் ஒருவராக விஷால் தரையில் அமர்ந்து தானும் அந்த உணவை சாப்பிட்டார். இவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார். நேற்று விஷாலின் பிறந்த நாளில், அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, இன்று காலை எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க புது கட்டிட கட்டுமான பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். சங்கத்தின் கட்டட திறப்பு விழா நடந்த பின்பு அடுத்த முகூர்த்தத்தில் எங்கள் திருமணம் நடக்கும்.
நானும் தன்ஷிகாவும் இணைந்து நடித்தது இல்லை. ஆனாலும் நடிகர் சங்கம் அதன் பணிகள் எங்களை சேர்த்து வைத்தது. கடவுள் எனக்கு அனுப்பிய தேவதை அவர். இன்று எங்கள் பெயர் குறித்த மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இனி நான் நிறைய மாறுவேன். குறிப்பாக சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன். அடுத்து பேச்சுலராக இருக்கும் சிம்பு அதர்வா ஜெய் திரிஷாவுக்கும் நல்ல நேரம் அமைய வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.
ஆனால் தனது பிறந்த நாளில் சாய் தன்ஷிகாவுக்கும் தனக்கும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக நடிகர் விஷால் கூறிய நிலையில் சங்கத்தின் கட்டுமான பணிகள் முடியாததால் இன்னும் 2 மாதங்கள் திருமணம் தள்ளிப் போயிருக்கிறது.
வழக்கமாக நடிகைகள்தான் தங்களுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் அல்லது திருமணம் ஆகிவிட்டால் இனிமேல் படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறுவார்கள். ஆனால் நடிகர் விஷால் அப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எத்தனை படங்களில் முத்தக் காட்சிகளில் விஷால் நடித்தார் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.





