ஒரு மனிதனுக்கு அவனது பெயர்தான் முதல் அடையாளம். அதுபோல் ஒரு திரைப்படத்துக்கு அந்த படத்தின் டைட்டில்தான் முதல் அடையாளம். அதனால் ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தனித்துவமானது. அதுவும் படத்தின் கதையின் மையக்கருவை சொல்லும் விதமான டைட்டிலை வைப்பதே பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் மரபாக இருந்தது.
கடலோர கவிதைகள் 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் நினைவே ஒரு சங்கீதம் பாசமலர் ஆயிரத்தில் ஒருவன் அடிமைப்பெண் நான் பாடும் பாடல் குங்குமச்சிமிழ் மெல்ல திறந்தது கதவு பயணங்கள் முடிவதில்லை வைதேகி காத்திருந்தாள் இதயக்கனி தாய் சொல்வை தட்டாதே என படத்தின் பெயர்களே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும்.
கடந்த பல ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கழுகு சிங்கம் புலி ஈ ஏண்டா தலையில எண்ணெய் வைக்கலே என் ஆளோட செருப்ப காணோம் பன்னிக்குட்டி நாய்கள் ஜாக்கிரதை என்றெல்லாம் சகட்டு மேனிக்கு படங்களுக்கு டைட்டில் வைத்து வருகிறார்கள். இதுதவிர விக்ரம் 2 கைதி 2 சர்தார் 2 விடுதலை 2 அரண்மனை 2 காஞ்சனா 2 என ஒரே தலைப்பை அடுத்தடுத்த பாகங்களுக்கும் 2 3 4 என வைத்தும் சமாளித்து விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி பழைய வெற்றி படங்களின் டைட்டில்களை இப்போதைய படங்களுக்கு டைட்டிலாக காப்பியடித்து வைப்பதும் தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டது. நல்ல டைட்டில் வைக்க கூட யோசித்து விடக் கூடாது என்பதில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் ரொம்பவும் கவனமாக இருக்கின்றனர். கதையை காப்பியடிப்பது போல டைட்டில்களையும் காப்பியடிக்கவே விரும்புகின்றனர்.
இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு பராசக்தி என சிவாஜி கணேசன் நடித்த அறிமுகமான படத்தின் டைட்டிலை வைத்திருப்பது சினிமா துறை சார்ந்தவர்களுக்கே எரிச்சலை, அதிருப்தியை தந்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் ஏற்கனவே தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்போது சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா கூறுகையில், பராசக்தி படம் என்றால் ஞாபகத்தில் இருப்பது அந்த ஒரு படம் மட்டும்தான். மறுபடியும் பராசக்தி என்பது ஒரு நிழலாக தான் இருக்குமே தவிர நிஜம் என்றால் அந்த பராசக்தி தான். இந்த டைட்டில் மீண்டும் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. புதுசா டைட்டில் யோசிக்கலாமே தவிர இருக்கிற பழைய டைட்டில் வைப்பது முறை அல்ல என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், தமிழ் சினிமாவில் லெஜண்ட்என்றால் சிவாஜி கணேசன் தான். அவர் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி. இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தின் தலைப்பை மீண்டும் வைப்பது என்பது சிவாஜி கணேசன் ரசிகர்கள் மட்டுமல்லாது, அவரது அபிமானி என்ற முறையில் இந்த கருத்தை பதிவு செய்கிறேன். தமிழ் சினிமாவில் வேற தலைப்பே இல்லையா? விளம்பர நோக்கத்துக்காக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என்று, அவர் கூறியிருக்கிறார்.





