தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஆனால் அருந்ததி பாகுபலி படங்களுக்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்த பிறகு உடல் பருமன் காரணமாக அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை. இப்போது காதி என்ற அவரது படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை அனுஷ்கா கூறியதாவது, எப்போதுமே நான் நடிக்கும் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் எனக்கு பதட்டமாக இருக்கும். அதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. பொதுவாக ஒரு வாரம் கழித்து நன்றாக இருக்கும். அதேபோல் ரிலீசுக்கு முன்பும் பின்பும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்.
ஆனால் இது போக போக சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதும் அந்த பயம் அப்படியேதான் இருக்கிறது. ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுவேன். இயக்குனர் கிரீஷ் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். காதி படக் கதையை என்னிடம் சொன்னபோது இது எனக்கு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
இந்த கேரக்டரை என்னால் செய்ய முடியும் என்று அவர் ஊக்கப்படுத்தினார். பொதுவாக கதை என்னை உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களை மையமாக கொண்ட படம், பெண் கதைநாயகியாக நடிப்பது போன்ற கதைகள் பற்றியது மட்டுமல்ல. பாகுபலிக்கு பிறகு எனது கதை தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்துகிறேன். கதையை நான் விரும்பி படமாக்குவதை ரசிக்க வேண்டும்.
ஆண்டுகள் செல்லச் செல்ல என் வேலையை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு படத்திற்கு 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை செலவிடுகிறேன் என்றால் அது என் வாழ்க்கையில் ஒரு ஆண்டு, அதை நான் ஒருபோதும் திரும்ப பெற முடியாது.
எனவே நான் நல்ல கதைகளை மெதுவாக தேர்வு செய்ய விரும்புகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனிமையில் இருப்பதையே விரும்புவேன். நான் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இல்லை. ஒவ்வொரு நாளும் அதில் நான் என்ன சொல்லிக் கொண்டிருப்பது என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கை மிகவும் எளிமையானது மற்றும் சலிப்பானது. ஆனால் அடுத்த தலைமுறை சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கிறது என்று நடிகை அனுஷ்கா கூறியிருக்கிறார்.





