கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் சரத்குமார் முரளி கே பாக்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
கணவரை பிரிந்த நடிகை கௌதமி, நடிகர் கமல்ஹாசனுடன் லிவிங் டு கெதர் முறையில் 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார். பிறகு நடிகை கௌதமி ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகினார். பிறகு பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். பாஜக கூட்டங்களிலும் தேர்தல் பிரசாரங்களிலும் அவர் கலந்துக்கொண்டார். ஆனால் அவர் பாஜக வை விட்டு சில ஆண்டுகளுக்கு முன் விலகிவிட்டார்.
தனக்கு சொந்தமான இடத்தை தன்னுடன் பணி செய்து வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறி நடிகை கௌதமி ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சென்னை நீலாங்கரையில் உள்ள 9 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாக கௌதமி புகார் கொடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகிறது. ஆனாலும் சட்ட விரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு கட்டிட அனுமதி பெற்று அந்த நிலத்தில் கட்டுமான பணிகள் நடந்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி அந்த கட்டுமான பணி செய்யும் இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டியுள்ள கட்டுமானங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் தன்னிடம் பணம் கேட்பதாகவும் வழக்கறிஞர் என்ற போர்வையில் வாட்ஸ் அப் மூலம் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் கௌதமி புகார் அளித்துள்ளார்.
தனக்கு எதிராக நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி சிலர் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் நடிகை கௌதமி சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





