ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல என்ற பழமொழி மிக பழையதாக இருந்தாலும் அது எந்த காலத்துக்கும் பொருந்தும் பொதுவான தத்துவமாக தான் இருக்கிறது. சினிமா துறையில் இப்போதெல்லாம் ஒரு படத்தில் பெரிய அளவில் ஹிட் கொடுத்து விட்டாலே, அவர்கள் வெற்றிப் பட நடிகர் வெற்றிப் பட நாயகி என்ற அந்தஸ்து ரசிகர்கள் மத்தியில் வெகு சுலபமாக கிடைத்து விடுகிறது.
கோமாளி படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். இந்த படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. அதன்பிறகு டிராகன் படத்தில் நடித்த அவர் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அசோக் செல்வன் ரித்திகா சிங் வாணிபோஜன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ஓ மை கடவுளே. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 2வது படம் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருந்தார். அவர் ஏற்கனவே கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய வெற்றி படங்களை தந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
டிராகன் படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கயாடு லோஹர் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது நடிகை கயாடு லோஹர் நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலரும் கயாடு லோஹரை அணுகி வரும் நிலையில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடிகை கயாடு லோஹர் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கு உடனடியாக ஓகே சொல்கிறார்.
இதுகுறித்து நடிகை கயாடு லோஹர் கூறியதாவது, என்னுடைய முதல் படத்தை வெற்றிகரமாக மாற்றியதில் இளைஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தான் இளம் தலைமுறையினர் இருக்கும் விழாக்களில் நான் ஆர்வமாக கலந்து கொள்கிறேன். இந்த தலைமுறையினர் புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடிக்கிறார்கள். எனக்கு தெரிந்து ஷிப் என்றால் அது கப்பல்தான். ஆனால் இப்போது ரிலேஷன்ஷிப் சிச்சுவேஷன் ஷிப் என ஏராளமான ஷிப்கள் வந்துவிட்டன ஆனால் நான் எந்த ஷிப்பிலும் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. அவ்வளவு எளிதாக எந்த விஷயத்திலும் சிக்கிக் கொள்ள மாட்டேன் என்று நடிகை கயாடு லோஹர் கூறியிருக்கிறார்.





