பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக இருப்பவர் கங்கனா ரெனாவத். இப்போது பாஜக எம்பியாகவும் இருந்து வருகிறார். இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் கங்கனா ரெனாவத் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தலைவி படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கேரக்டரில் கங்கனா ரெனாவத் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
தமிழில் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டில் வெளியான தாம் தூம் படத்தில் நடிகர் ரவிமோகனுக்கு ஜோடியாக கங்கனா ரெனாவத் நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சந்திரமுகி 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
பொதுவாக இன்றைய சினிமாக்களில் பெண்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் அதிகரித்து வருகிறது. அந்த படங்கள் வெற்றியும் பெறுகிறது. இதுகுறித்து நடிகை மற்றும் எம்பியுமான கங்கனா ரெனாவத்திடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, இந்த மாற்றத்திற்கு பல பெண்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.
மீனாகுமாரி மதுபாலா நர்கீஸ் தத் வஹீதா ரகுமான் வைஜெயந்தி மாலா ஹேமாமாலினி ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என திரையுலகில் நமக்கு பெண்களின் சிறந்த பாரம்பரியம் இருந்துள்ளது. திரைத்துறையின் இந்த வளர்ச்சியை பல தலைமுறைகளை சேர்ந்த பெண்களின் கூட்டு முயற்சியால் உருவானது. இவர்களின் பங்களிப்புகளுக்கு எப்போதும் பரவலான அங்கீகாரம் கிடைப்பதில்லை.
பெரும்பாலும் பெரிய சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் சிறிய பங்களிப்புகளும் மிக முக்கியமானவை. உதாரணமாக இன்று நான் எனது கேரவனுக்குள் செல்லும் போதெல்லாம் நடிகைகளுக்காக கேரவன்களை கொண்டு வருவதற்கு பூனம் தில்லான் முக்கிய காரணமாக இருந்தார் என்பதை நினைவில் கொள்கிறேன்.அதற்கு முன்பு கழிப்பறையை பயன்படுத்துவது ஆடைகளை மாற்றுவது அல்லது ஒரு மரத்தின் நிழலில் டச் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக புதர்களுக்கு பின்னால் செல்ல வேண்டியிருந்தது.
இது எவ்வளவு கடினமானது என்று கற்பனை செய்து பாருங்கள். எந்த ஒரு மாற்றமும் தனிநபரால் மட்டுமே நடப்பதில்லை. யாரோ ஒருவர் தொடங்கி வைக்கிறார்கள். மற்றவர்கள் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். பயணம் தொடர்கிறது. அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று நடிகை கங்கனா ரெனாவத் கூறியிருக்கிறார்.





