தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய், சமீபத்தில் அவர் நடித்து முடித்து ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவரான நடிகர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு அரசியல் மாநாடுகளையும் வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார்.
நடிகர் விஜய் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். நாளை திருச்சியில் தனது கட்சியின் விஜய் 2026 என்ற சுற்றுப் பயணத்தை துவங்கும் அவர் வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டங்கள் வாரியாக மக்களை சந்திக்கிறார். நேரில் குறைகளை கேட்கிறார்.
வருகிற டிசம்பர் 20ம் தேதி வரை ஏறக்குறைய 4 மாதங்களுக்கு சனிக்கிழமைகளில் மக்களை நேரில் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் நாளை திருச்சியில் துவங்க உள்ளார். அவருக்கு 21 நிபந்தனைகளை விதித்து போலீஸ் தரப்பில் நெருக்கடி தரப்பட்டுள்ளது.
முன்னதாக சுற்றுப்பயணம் குறித்து போலீஸ் அனுமதி கேட்க திருச்சிக்கு வந்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 6 கட்சி நிர்வாகிகள் மீதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதற்கு கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கடும் கண்டனத்தை தெரிவித்து, அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தொடர்ந்து ஆளுங்கட்சி திமுக தரப்பில் நடிகர் விஜய்க்கு நெருக்கடிகள் தரப்பட்டு வருகிறது. நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் தடையும் இடையூறும் ஏற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜய் மீது திமுக அதிக கவனம் செலுத்தி பாதிப்பை உருவாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை கஸ்தூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு விஜய் கட்சியை பார்த்து பயப்படுகிறதா அல்லது அவரை பயமுறுத்துகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழக வெற்றி கழகத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சமீபத்தில்தான் நடிகை கஸ்தூரி பாஜக வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





