ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாதது குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்று ஜனநாயகனும் இல்லை, ஜனநாயகமும் இல்லை என்று நடிகர் சிபிராஜ் கூறியிருந்தார். இயக்குனர்கள் மாரி செல்வராஜ் பா ரஞ்சித் ராம்கோபால் வர்மா விக்ரமன் என பலரும் இதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் இதுகுறித்து இதுவரை வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி கூறியதாவது, ஜனநாயகன்படத்தை பொருத்த வரைக்கும் எனக்கு தெரிந்து அந்த படம் முழுமையாக கடந்த ஆண்டு மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தணிக்கை குழுவுக்கு ஏன் படத்தை அனுப்பவில்லை என்பது புரியவில்லை.
விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதைத் தாண்டி விஜய் தற்போது எதிர்பார்ப்புகளுக்குரிய ஒரு அரசியல் தலைவராகவும் பார்க்கப்படுகிறார். திமுகவை அதிகமாக எதிர்க்கக் கூடியதாகவும் பாஜகவையும் எதிர்க்கக்கூடிய தலைவராகவே தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அப்படி இருக்கும்போது அவருடைய கடைசி படமாக ஜனநாயகனுக்கு எங்கிருந்தாவது எப்படியாவது எதிர்ப்பு வரலாம் என்பதை அவர்கள் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டு இருக்க வேண்டும்.
தற்போது தணிக்கை வாரியத்தால் பிரச்சனை வந்துள்ளது. ஆனால் நான் இதற்கு முன்பே யாராவது கதை திருட்டு என்றோ என்ஓசி சான்று வாங்கவில்லை என்றோ பிரச்சனை செய்வார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். படம் முழுக்க ராணுவ அடையாளங்களையும் தேசிய அடையாளங்களையும் பதிவு பண்ணி இருக்காங்க. ஆனால் அதற்கான எந்த ஒரு என்ஓசியும் வாங்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் வாங்கியிருக்க வேண்டும் தானே? இதற்கு முன்பு வந்த அமரன் திரைப்படம் அதை எல்லாம் பெற்றுத்தானே ரிலீஸ் செய்தார்கள்.
இந்த பிரச்சனையில் அரசியலில் விஜய்க்கு உள்ள அனுபவமின்மையும் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உள்ள அனுபவமின்மையும் தான் வெளிப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்சார் சார்ந்த எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் போனதை தான் இது காட்டுகிறது. நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் இருந்து மெர்சல் படம் வரை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்த விஜயின் ரசிகை நான். காவலன் திரைப்படம் வெளிவந்த போது இவருக்கு பிரச்சனை வந்தது. அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்டவராக ஒரு சிம்பதியோடு பார்த்தோம்.
ஆனால் இன்றைக்கு அவர் அனைத்திற்கும் கம்முன்னு அமைதியாகவே இருக்கிறார். தற்போது அவரை பாதிக்கப்பட்டவராக பார்க்கிறதா? இல்லை செயலிழந்து போனவராக பார்க்கிறதா? ஒரு மாதிரி முடக்குவாதம் வந்தவர் போல இருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியவில்லை. அவருடைய பிரச்னைக்கு அவரே குரல் எழுப்பவில்லை என்றால் மக்களுடைய பிரச்சனைக்கு எப்படி அவர் குரல் எழுப்புவார் என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





