தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வாங்குகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் மட்டுமே முன்னணியில் உள்ளனர். இருவருமே 20 ஆண்டுகளுக்கு மேலாகி நாயகியாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா அடுத்தடுத்து ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி நடிகையாக மாறிய அவர் ஒரு கட்டத்தின் மாயா அறம் நெற்றிக்கண் போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்தார்.
ஒரு ஹீரோ நடித்தால் அந்த படத்துக்கு கிடைக்கும் முக்கியத்துவமும் வரவேற்பும் நயன்தாராவுக்கு கிடைத்த நிலையில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் போட ஆரம்பித்தனர். ஆனால் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் தெலுங்கு நடிகை விஜயசாந்தி தான். மன்னன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனது படங்களில் டைட்டில் கார்டில் நயன்தாரா அவசியம் போட்டே ஆக வேண்டும் என்று இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி தந்ததாகவும் குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த அண்ணாத்த படத்தில் அந்த டைட்டில் கார்டு போடுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஏனெனில் ரஜினி படங்களில் அவருக்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் பிஜிஎம் உடன் டைட்டில் கார்டு போடப்படும்.
அல்டிமேட் ஸ்டார் தல ஆசை நாயகன் என அழைக்கப்பட்ட நடிகர் அஜீத்குமார், தனக்கு அதுபோன்ற படங்கள் வேண்டாம் என ஏற்கனவே அறிவித்து விட்டார். சில மாதங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனும் எனக்கு உலக நாயகன், பத்மஸ்ரீ டாக்டர் பட்டங்கள் வேண்டாம் என அறிவித்த நிலையில், இப்போது நயன்தாராவும் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை குஷ்பு கூறியதாவது, நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது. யாருக்கும் பட்டம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுக்கவில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை சொல்லி அழைத்தாலே நன்றாக இருக்கும், என்று வெளிப்படையாக தனது கருத்தை கூறியிருக்கிறார்.





