தமிழில் நையாண்டி ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாசில் மகன் நடிகர் பகத் பாசிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நஸ்ரியா திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பின் குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் கடந்த 4 மாதங்களாக அவரை பற்றிய எந்த பதிவுகளும் இல்லை. சோஷியல் மீடியாவிலும் அவரது பதிவுகள் இல்லை.
இதுகுறித்து தன்னிலை விளக்கம் தந்து நடிகை நஸ்ரியா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, நான் எப்போதுமே இந்த உலகில் ஆக்டிவாக இருந்து வருபவள். ஆனால் சமீப காலமாக நான் கொஞ்ச நாள் ஆளே காணாமல் போய்விட்டேன் என பலரும் நினைத்திருக்கலாம். அது ஏன் என உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை.
கடந்த சில மாதங்களாகவே நான் என்னுடைய உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களை எதிர்கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு போராடி வருகிறேன். தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன்.
அதே சமயம் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய 30 வது பிறந்தநாள், புது வருட கொண்டாட்டம், என்னுடைய சூட்சும தர்ஷினி படத்தின் வெற்றி விழா என எந்த முக்கிய நிகழ்வுகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் அல்ல, என்னுடைய நண்பர்களுக்கு எனக்கு என்ன ஆனது என்று விவரித்து சொல்லாததற்கும் அவர்களுடைய தொலைபேசி அழைப்புகளை எடுக்காததற்கும், அவர்களுக்கு மெசேஜ் பண்ணாததற்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னால் யாருக்கேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அளவிற்கு நான் முழுமையாக முடங்கிப் போனேன் என்று தான் சொல்ல வேண்டும். என்னை தங்களது படங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு முடியாமல் போனவர்களிடமும் நான் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில் என்னுடைய சூட்சும தர்ஷினி படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் கிரிட்டிக் விருது கிடைத்துள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு கடினமான பயணமாக இருந்தாலும் உங்களுடைய அன்பையும் ஆதரவையும் இந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டு பாராட்டுகிறேன். நான் முழுமையாக திரும்பி வர இன்னும் கொஞ்ச நாட்கள் எடுக்கும். ஆனாலும் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என்று நடிகை நஸ்ரியா கூறியிருக்கிறார்.





