நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருணாச்சலம். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக சௌந்தர்யா நடித்திருப்பார். இதில் செகண்ட் ஹீரோயினாக ரம்பா வருவார். 30 நாளில் 30 கோடியை ஹீரோ செலவழிக்க வேண்டும் என்ற ஒரு வரி கான்செப்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ரம்பா செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க அவர் வருவார். அவருடன் அள்ளி அள்ளி அனார்கலி பாடலுக்கும் ரஜினிகாந்த் ஆட்டம் போட்டார். ஆனால் இந்த திரைப்படத்திற்குப் பிறகு ரஜினியுடன் ரம்பா ஜோடி சேரவே இல்லை. இப்படியான சூழலில் அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தது குறித்து தனியார் youtube சேனலுக்கு ரம்பா பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, அருணாச்சலம் திரைப்படம் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதேசமயம் ஹிந்தியில் பந்தன் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்றது. அதில் ஹீரோவாக சல்மான் கான் நடித்து வந்தார். காலையில் அருணாச்சலம் பட சூட்டிங்கிலும், மதியத்திற்கு மேல் பந்தன் பட படப்பிடிப்பிலும் நான் இருப்பேன்.
இந்த நிலையில் ஒருநாள் ஷூட்டிங் நடைபெற்ற போது, சல்மான் கான் மற்றும் ஜாக்கிசரஃப் இருவரும் அருணாச்சலம் சூட்டிங் நடந்த இடத்திற்கு வந்தனர். அப்போது நான் இருவர்களையும் ஹக் செய்து வணக்கம் வைத்தேன். பின்னர் அவர்கள் ரஜினி சார் உடன் பேசி விட்டு சென்றார்கள். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் ஒருவித அமைதி நிலவியது.
ரஜினி சார் கோபத்தில் தனது துண்டை கீழே போட்டு விட்டுச் சென்றார். மற்றவர்கள் என்னை பார்த்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கூறினார்கள். அப்போது எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அதன் பிறகு ரஜினி சார் என்னிடம், உங்க ஊருன்னா இப்படி பண்றது. எங்களுக்கு மட்டும் வெறும் வணக்கம் மட்டும் வைப்பதா என்று கூறினார். அது கேலியாகத்தான் இருந்தது. இன்னொரு முறை படப்பிடிப்பு தளத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் என் பின்னால் யாரோ கை வைத்தார்கள்.
நான் அலறி விட்டேன். அதன் பிறகு தான் அது ரஜினி சார் என்றும் சும்மா டிராமாவுக்காக அப்படி செய்ததும் தெரிய வந்தது என்று கூறியுள்ளார். ரம்பாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதேசமயம் ரஜினி எப்படி இவ்வாறு நடந்து கொள்ளலாம் என இணையத்தில் சிலர் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில், ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்ற ஹாஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த விஷயம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.





