தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் கத்தி தெறி தங்கமகன் அஞ்சான் நடிகையர் திலகம் நீதானே என் பொன்வசந்தம் சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சமந்தா, இந்தியிலும் சிட்டாடல் வெப் சீரிஸ் வாயிலாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் சமந்தா காதல் திருமணம் செய்தார். ஆனால் 2021ம் ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். சினிமாவில் இனி நடிக்க வேண்டாம் என நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்ததே இந்த விவாகரத்துக்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.
நாக சைதன்யா, தெலுங்கில் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்த நாகர்ஜூனா இப்போது குபேரா கூலி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை அமலாவின் கணவர்தான் நாகர்ஜூனா என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாக சைதன்யாவை விவாகரத்து பிரிந்த பின் நடிகை சமந்தா, மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அலோபதி ஓமியோபதி என தீவிர மருத்துவ சிகிச்சைகளில் இருந்த அவர் சில ஆண்டுகள் போராடி அந்த நோயில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறார். நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் 2வது திருமணம் செய்யவில்லை.
ஆனால் அடிக்கடி அவர் சில நடிகர்களுடன் சில இயக்குனர்களுடன் கிசுகிசுவில் சிக்கி வருகிறார். அந்த நடிகருடன் டேட்டிங்கில் சமந்தா இருக்கிறார். இந்த இயக்குனருடன் சமந்தா டேட்டிங்கில் இருக்கிறார். பல இடங்களில் அவருடன் ஒன்றாக சமந்தா காணப்படுகிறார் என்கிற தகவல்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் துபாயில் காதலருடன் சமந்தா இன்ப சுற்றுலா சென்றிருப்பதாகவும் இணையத்தில் தகவல் வைரலானது.
இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக என் படங்கள் வெளியாகவில்லை. முன்பு போல வெற்றி இல்லையே என என்னை சுற்றி இருப்பவர்கள் நினைக்கலாம். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்யும் வேலைகள் எனக்கு நிம்மதியை தரும்போது மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.





