மலையாள சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள், அடுத்தடுத்த பட வாய்ப்பு தர நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில், விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் அந்த கமிட்டி வெளியிட்ட விசாரணை அறிக்கையில், மலையாள சினிமாவில் சில இயக்குனர்கள், சில நடிகர்கள் இதுபோல் பாலியல் துன்புறுத்தல்களுக்கு, அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்பது உண்மைதான் என்றும் அந்த கமிஷன் உறுதிப்படுத்தியது. இதில் மலையாள சினிமாவுலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம்( அம்மா) சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் மீதும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் உட்பட நிர்வாக கமிட்டியை சேர்ந்த 17 நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தது, மலையாள சினிமா வட்டாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை ஷகிலா, ச்மீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மலையாள சினிமாவில் இருப்பது போன்று, தமிழ் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. தெலுங்கில் மிக அதிகமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடிகைகளுக்கு இருந்து வருகின்றன. இந்தியை பொருத்தவரை அப்படியல்ல. உடனடியாக அவர்கள் நண்பர்களாக மாறி விடுவார்கள்.
தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்னைகள் இருக்கின்றன. இதெல்லாம் பேசி வைத்துக்கொண்டுதான் செய்யப்படுகிறது. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என, நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்த பிறகுதான் அந்த படத்தில் அந்த நடிகை நடிப்பார்.
முக்கால்வாசி படம் முடிந்த பிறகு, நடிகை அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்துழைக்க மறுக்கும்போது பிரச்னை ஏற்படும். ஏனென்றால் முக்கால்வாசி படம் நடித்த பிறகு அவரை வெளியேற்ற முடியாத நிலை தயாரிப்பாளர், இயக்குனருக்கு ஏற்படும். குடும்ப சூழல் காரணமாக பலரும் இதை வெளியே சொல்வதில்லை. யாரும் பேசாவிட்டால் இதற்கு தீர்வு கிடைக்காது. பூனைக்கு யாராவது மணி கட்டியே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.





