தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த சூர்யா, கடந்த 10 ஆண்டுகளாக தோல்வி படங்களாக தந்து வருகிறார். சிங்கம் 2 படத்துக்கு பிறகு தியேட்டரில் வெளியான கங்குவா உள்ளிட்ட 10 படங்கள், படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன. கொரோனா தொற்று காலகட்டத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம், சூரரைப் போற்று என்ற 2 படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன.
இந்நிலையில் கங்குவா படம் தந்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து நடிகர் சூர்யா இன்னும் மீளவில்லை. ஏனெனில் கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும், எல்லோரும் வாயை பிளந்துக்கிட்டு பார்ப்பீங்க என்றெல்லாம் அவர் ஏகப்பட்ட கனவுகளுடன் பேசினார். ஆனால் படம் பார்த்தவர்கள் தந்த விமர்சனம், படுமோசமாக இருந்ததால், சூர்யா அப்செட் ஆகி விட்டார்.
கங்குவா படத்துக்கு பிறகு சூர்யா நடித்த சூர்யா 44 படம் அடுத்து வெளிவர உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில், நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இது காதல் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு கல்ட் என பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த படங்களை தொடர்ந்து இப்போது நடிகர் சூர்யா, தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து வருகிறார். கடந்த 2 வாரங்களாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வளாகத்தில், கோவில் ஷெட் போட்டு இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். அவரும் கோவையில் நடந்துவரும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். நேற்று கோவையை அடுத்துள்ள மருதமலை கோவிலுக்கு சென்ற நடிகை திரிஷா, சுவாமி தரிசனம் செய்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
சூர்யா 45 படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதே போல் லப்பர் பந்து படத்தில் முக்கிய கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகாவும் நடிக்கிறார். இப்போது புதிய தகவலாக இந்த படத்தில் நடிகை ஷிவதாவும் நடிப்பது உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நெடுஞ்சாலை, கருடன், தீரா காதல், அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா படத்தில் 3 முக்கிய நாயகிகள் நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.





