தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான பேசும் மொழி உண்டு. பொதுவான தமிழ் மொழி என்றாலும், அதை பேசும் போது அதை உச்சரிக்கும் விதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால், அது மிகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். ஒருவர் தமிழில் பேசினாலும், அவர் பேசும் முறை, வார்த்தைகளை பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவர் எந்த மாவட்டத்துக்காரர் என்பதை அறிய முடியும்.
குறிப்பாக கோவை, மதுரை, திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் பேசும் மொழி வெவ்வேறாகவே இருக்கும். வார்த்தைகளை உச்சரிப்பதிலும் நிறைய வித்யாசங்களை காண முடியும். அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்ட மக்கள் கொங்கு தமிழில் பேசுவார்கள். ங்க என்ற மரியாதை சொல் சேர்க்காமல் அவர்களுக்கு பேசவே வராது.
அந்த விதத்தில்தான், தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவுக்கு, இயக்குநரை முதன்முதலில் போனில் அழைத்துப் பேசிய போது, நாம் சரியான நபருடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் ஹாலிவுட் படம் போன்ற கதையை மையப்படுத்தி, டைம் டிராவல் சப்ஜெக்ட் படத்தை டைரக்ட் செய்த இயக்குநர் இப்படியா பேசுவார் எனவும் குழம்பி போயிருக்கிறார்.
சமீபத்தில், அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் இன்று நேற்று நாளை படம் பார்த்த போது, அது டைம் டிராவல் கருவை மையப்படுத்திய மிக சிறந்த படமாக இருந்தது. எனவே, அந்த படத்தின் இயக்குநர் ரவிக்குமாருடன் பேசத் தோன்றியதால், அவரது நம்பரை வாங்கி அவருக்கு போன் செய்தேன்.
போனை எடுத்தவுடன் அவர், யா டெல்மீ என்று பேசுவார் என்றுதான் நினைத்தேன், வணக்கங்க, நான் ரவிக்குமார் பேசறேங்க, என்றார். நான் சந்தேகப்பட்டு, நெம்பர் எதுவும் மாத்தி அடிச்சிட்டேனா என செக் செய்தேன். ஆமாங்க, நான் இன்று நேற்று நாளை டைரக்டர் ரவிக்குமார் தான் பேசறேங்க என்றார். படம் பார்த்தீங்களா, புடிச்சதுங்களா, ரொம்ப சந்தோஷமுங்க, நானும் உங்களை நேர்ல மீட் பண்றதுக்கு முயற்சி பண்ணீட்டுதான் இருந்தேனுங்க என்று கோயம்புத்தூர் பாஷையில் பேசினார். இவ்வளவு பெக்கூலியராக பேசுகிறாரே எனத் தோன்றியது. அப்படித்தான், அயலான் கதையையே கோயம்புத்தூர் பாஷையில் கூறினார்.
அயலான் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட, காட்சிகளை அவர் கோயம்புத்தூர் பாஷையில்தான் விளக்கி கூறுவார். புரியாமல் தடுமாறுபவர்களுக்கு சில நேரங்களில் நான் ஆங்கிலத்தில் கூறுவேன். நாளடைவில் அவர்களும் அவரது பேச்சை புரிந்துக்கொண்டனர் என்று நகைச்சுவையாக டைரக்டர் ரவிக்குமார் குறித்து சிவகார்த்திகேயன் பேசினார். டைரக்டர் ரவிக்குமார், திருப்பூரைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.





