தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இருந்து விடுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளாக இருக்கின்றன. அந்த வகையில் 1989ம் ஆண்டில் வெளியான கரகாட்டக்காரன் படம் இன்றும் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற ஒரு படமாக உள்ளது.
இந்த படத்தில் ராமராஜன் கனகா கவுண்டமணி செந்தில் சந்திரசேகர் சந்தானபாரதி காந்திமதி சண்முகசுந்தரம் கோகிலா என பலரும் சிறந்த நடிப்பை தந்திருந்தனர். இந்த படத்தின் காமெடி இப்போதும் ரசிக்கப்படுகிறது. பழம்பெரும் நடிகை தேவிகா மகள் கனகா இந்த படத்தில்தான் நாயகியாக அறிமுகமானார்.
கரகாட்டக்காரன் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சுகன்யா கூறியதாவது, ஒரு முறை நான் என் அக்கா மற்றும் எங்களுடைய டான்ஸ் குழு சார்ந்த ஏழெட்டு பெண்களும் விமானத்தில் பயணம் செய்தோம். இது 1980 காலகட்டத்தில் நடந்தது. அதே விமானத்தில் ராமராஜன் கெளதமி நடிக்கும் படம் என நினைக்கிறேன்.
இயக்குனர் கங்கை அமரன் சார் விமானத்தில் இருந்தார். அப்போது என் அக்காவிடம் வந்து கங்கை அமரன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்த பெண்களை பார்த்த அவர் என்னை பார்த்து விட்டு, எல்லா பெண்களும் கலகலப்பாக இருக்காங்க. ஏன் இந்த பொண்ணு மட்டும் இவ்வளவு அமைதியாக இருக்கிறா. யார் இவ? என்று ஜாலியாக கேட்டார்.
அப்போது என் அக்கா, என்ன அங்கிள் இப்படி கேட்டுட்டீங்க? இது என்னுடைய தங்கை என்று அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்படியா, உன்னோட தங்கையா? எனக்கு தெரியவே தெரியாது என்று சொல்லி விட்டார். அப்புறம் ஊருக்கு போயிட்டு வந்த 2 நாட்களில் கங்கை அமரன், ஆண்டி எங்கள் வீட்டுக்கு வந்துட்டாங்க.
கரகாட்டக்காரன்னு ஒரு படம் எடுக்கிறேன். அதில் நீதான் ஹீரோயினா ஆக்ட் பண்ணனும் என்று சொன்னார். நான் அலறியடித்துக்கொண்டு நான் அதெல்லாம் பண்ணவே மாட்டேன். எனக்கு சினிமா எல்லாம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகை சுகன்யா கரகாட்டக்காரன் படத்தில் நடிக்காதது குறித்து பேசியிருக்கிறார்.





