தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் நடிகை திரிஷாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால் ஒரு படத்துக்கு ரூ. 8 கோடி வரை அவர் சம்பளம் வாங்குகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் திரிஷா நடித்த ஐடென்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த விஸ்வம்பரா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தமிழில் விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து தக்லைப் படம் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் திரிஷா சிம்பு அபிராமி அசோக் செல்வன் ஜோஜூ உள்ளிட்டோர் நடித்த படம் தக்லைஃப். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்துள்ள திரிஷா இப்போது தக்லைஃப் படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷா நடித்த பிறகுதான் அவரது இமேஜ் வேற லெவலில் எகிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று தக்லைஃப் படத்தில் இருந்து ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரிஷா சிம்பு அசோக் செல்வன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் கமல் பேசுகையில், இந்த படத்தில் நடித்த திரிஷா அபிராமி இருவருமே என்னை பார்த்து ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லவில்லை என்று கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் நடிகை திரிஷா பேசியதாவது, இந்த படத்தில் நான் நடித்தது கனவு மெய்ப்பட்ட தருணம். மணிரத்னம் கமல் போன்றவர்களுடன் நானும் இணைந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. சிம்புவும் நானும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இப்போதும் பலர் அந்த படத்தை பற்றிதான் கேட்கிறார்கள். மீண்டும் எப்போது சிம்புவுடன் சேர்ந்து நடிப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேள்வி கேட்பார்கள். தக்லைஃப் படம் மூலம் அந்த மேஜிக் நடந்திருக்கிறது என்று திரிஷா கூறியிருக்கிறார்.





