விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் வரும் அக்டோபரில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு வரை, ஏழு ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை அவருக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணி செய்ய இயலாது என்று அவர் திட்டவட்டமாக அறிக்கை மூலம் தெரிவித்து விட்டார். இதையடுத்து கமல்ஹாசன் இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்ற வருகிறார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிக் பாஸ் சீசன் 8 தொடர்பான பிரமோ வீடியோ வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் சொல்வது போல இருந்த அந்த பிரமோ வீடியோ பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது.
வரும் அக்டோபரில் துவங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியானாலும் இன்னும் அவை அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிக் பாஸ் போட்டியில் கடந்த முறை பங்கேற்ற நடிகை விசித்ரா தனது கருத்தை கூறியிருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்தவர் விசித்ரா. டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்று பலரையும் கவனத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசித்திரா கூறுகையில், விஜய் சேதுபதி ஒரு சிறந்த தொகுப்பாளராக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். முன்பு தொகுப்பாளராக பணி செய்த நடிகர் கமல்ஹாசன் செட்டுக்குள் வந்தாலே அனைவரும் பயப்படுவார்கள். அது போல் ஒரு தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதியும் போட்டியாளர்கள் மத்தியில் கொடுக்க வேண்டும். மேலும் அவர் தன்னுடைய மெண்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியது போலவே, மிகச் சிறப்பாக விஜய் சேதுபதியும் நடத்துவார் என்று நம்புகிறேன் என்று அந்த நேர்காணலில் விசித்ரா கூறி இருக்கிறார். அதே நேரத்தில் மெண்டல் ஹெல்த்தையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று அவர் விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





