நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த படம் ஆரம்பித்ததே மிக தாமதம் என்ற நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய 4 மாதங்களாக, தொடர்ந்து பல பிரச்னைகள் படப்பிடிப்பை சரிவர நடத்த விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன. எனினும் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடும் திட்டத்தில் டைரக்டர் மகிழ்திருமேனி இருக்கிறார்.
அஜர்பைஜானில் தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் நீடித்து வருவதால் அங்கு இனி ஷூட்டிங் நடத்த வேண்டாம் என்ற முக்கிய முடிவுக்கு, விடாமுயற்சி படக்குழு வந்துவிட்டது. இனியும் அங்கு படப்பிடிப்பு நடத்தினால் படத்தை முடிக்க முடியாத அளவுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்பதை படக்குழு தெரிந்துக்கொண்டதால், அடுத்து ஷார்ஜாவில் ஷூட்டிங் நடத்த முடிவாகி உள்ளது.
இந்த படத்தை முடித்த பிறகு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பான் இந்தியா படத்தில், மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும், அதைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் படத்திலும் நடிக்க அஜீத்குமார் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கங்குவா படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு சிறுத்தை சிவா தனது அடுத்த படத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். அதனால், அந்த நேரத்தில் அஜீத் படத்தை இயக்குவார் என தெரிகிறது. வாடிவாசல், விடுதலை 2 படங்களை முடித்த பின், அஜீத் படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை நடித்து முடிக்க, அஜீத் திட்டமிட்டுள்ளார்.
விடாமுயற்சிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜீத்குமார் நடிக்க உள்ள நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் வெளிநாடுகளில்தான் நடத்தப்படுகிறது. குறிப்பாக லண்டன், பாங்காங் போன்ற முக்கிய நகரங்களில், ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. வெளிநாட்டில் நடக்கும் கதை என்பதால், பல விதங்களில் பிரமாண்டத்தை காட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசிய அஜீத்குமார், இந்த படத்தில் முக்கிய முன்னணி நடிகர்களை நடிக்க வைப்பதை விட ஸ்கிரிப்ட் தான் ரொம்ப முக்கியம். அதில் அதிக கவனம் செலுத்தி, கதையை உருவாக்குங்கள், என்று அட்வைஸ் செய்துள்ளார். ஏனெனில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் கேமியோ ரோல்களை நிறைய கொண்டு வருவது போல, தன்னுடைய படத்தில் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் அஜீத்குமார்.





