நடிகர் அஜீத்குமார் அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றுக்கொடுத்த படம் இயக்குநர் வசந்த் இயக்கிய ஆசை படம்தான். அதன்பிறகுதான் ஆசை நாயகன் அஜீத்குமார் என்ற பட்டப் பெயரே அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆசை படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு பல படங்களில் நடிக்க அஜீத்குமாருக்கு வாய்ப்புகள் வந்தது.
அதன்பிறகு இயக்குநர் அகத்தியனின் இயக்கத்தில் காதல் கோட்டை என்ற படத்தில் அஜீத்குமார் நடித்தார். இதில் நாயகியாக தேவயானி நடித்திருந்தார். நேரில் சந்திக்காமலேயே ஊட்டியில் இருந்து தேவயானியும், சென்னையில் இருந்து அஜீத்குமாரும் கடிதங்கள் வாயிலாக பேசி, பழகி, காதலிப்பர். இறுதியில் ஒன்று சேருவர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் அஜீத்குமார், நடிகை ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நெருக்கமாக பழகியதால் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்றும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அஜீத்குமார் கடைசியில் அதை நட்போடு நிறுத்திக்கொண்டார்.
இதையடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் நடித்த போது, அஜீத்குமார் – ஷாலினி இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை ஒருவரை ஒருவர் வெளிப்படுத்திக்கொள்ள அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிவதற்கு முன்பே இவர்களது திருமண வாழ்ககை பேச்சு துவங்கி விட்டது.
இந்நிலையில், அஜீத்குமார் – ஷாலினி திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அஜீத்குமார் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டர். அந்த திருமண நிகழ்வின் போது நடந்த ஒரு விஷயத்தை சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நட்சத்திரங்களின் திருமணங்களுக்கு பல பிரபலங்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களுடன் வரும் கார் டிரைவர்களுக்கு திருமண விருந்து சாப்பிட ஆசையாக இருக்கும். அதற்காக அஜீத் ஷாலினி திருமணத்தின் போது விஐபி கார்கள் நிறுத்தும் பகுதியில் அனைத்து கார் டிரைவர்களுக்கும் திருமண விருந்து உணவு பார்சலும், தண்ணிர் பாட்டலும் தரப்பட்டது என்று நிகில் முருகன் கூறியிருக்கிறார்.





