அஜித்குமார் நடிக்க உள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஜூலையில் தொடங்கும், ஆகஸ்தில் தொடங்கும் என்று அவ்வப்போது பல தகவல்கள் வந்தாலும் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை. இந்த நிலையில் அஜித் திடீரென பைக் எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்பிவிட்டார். இதனால் “விடாமுயற்சி திரைப்படம் ஷூட்டிங் போவீர்களா? மாட்டீர்களா? ஒரு முடிவை சொல்லுங்க” என்று ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அஜித் ரசிகர்களின் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அதாவது அஜித்தின் புதிய திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று கூறினார். ரசிகர்கள் பலரும் “விடாமுயற்சி திரைப்படத்தையா ஓடிடியில் வெளியிடப்போகிறார்கள்?” என்று அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் அவர் கூற வந்ததோ வேறு விஷயம். மாறாக அது அதிர்ச்சியான விஷயம் அல்ல, சற்று மகிழ்ச்சியை தருகிற விஷயமும் கூட. அஜித் மிகப்பெரிய பைக் ரேஸர் என்பதை பலரும் அறிந்திருப்போம். அவர் தற்போது தனது பரஸ்பர மரியாதை பயணத்தை நோக்கிய முயற்சியில் இருக்கிறார்.

அதே போல் சமீப காலமாக இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களுக்கு மோட்டர் சைக்கிளில் பயணம் சென்ற அஜித், பூடான், நேபாள் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு கூட அஜித் சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிலையில் அஜித்குமார் பைக் பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றாக இணைத்து ஒரு டாக்குமென்ட்ரியாக ஓடிடியில் வெளியிடலாம் என்று அஜித்திற்கு நெருக்கமானவர்கள் பலரும் ஐடியா கூறினார்களாம். இதற்கு அஜித்தும் சரி என்று கூறியிருக்கிறார்.
அதன்படி தற்போது இதற்கான எடிட்டிங் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். இந்த டாக்குமென்ட்ரிக்கு “World tour on two wheeler” என்று பெயர் வைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் இந்த டாக்குமென்ட்ரி ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.





