நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும், சினிமாக்காரர்களின் ஆதரவும் இல்லாமல், நடிக்க வந்தவர். டிவி சேனலில் விளம்பர படம் ஒன்றில் அவரை பார்த்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இயக்குநர் வசந்திடம் சொல்ல, அப்படிதான் ஆசை படத்தில் அஜீத்குமார் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகர்கள் கமல்ஹாசன், சியான் விக்ரம், ஆர்யா, சூர்யா, ஜெயம் ரவி போன்றவர்கள், படத்தின் கேரக்டருக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும், மெனக்கெடுவார்கள், தங்களது உடல் தோற்றத்தை மாற்றிக்கொள்வார்கள். இயக்குநர்களின் விருப்பம் என்னவோ, ரசிகர்களை எது திருப்திபடுத்துமோ அந்த வகையில் தங்களை மாற்றிக்கொண்டு அந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து நடிப்பார்கள்.
இந்தியன் தாத்தா வேடத்தில் நடிக்கும் போது, கமல் 8 மணி நேரம் வரை எதுவும் சாப்பிட முடியாது. வெறும் ஜூஸ் மட்டும்தான் உணவு. சேது, காசி, ஐ போன்ற படங்களுக்காக, மாதக்கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார் சியான் விக்ரம். பேராண்மை, வனமகன் போன்ற படங்களுக்காக, தன்னை மிகவும் வருத்திக்கொண்டவர் ஜெயம் ரவி. நான் கடவுள் படத்துக்காக, டைரக்டர் பாலா சொன்னபடி அகோரியாக மாறி நடித்தவர் ஆர்யா. அதுபோல்தான் சூர்யாவும். கஜினி, பேரழகன் படங்களே இதைச் சொல்லும்.
ஆனால் நடிகர்களில் அஜீத்குமார் மட்டும் இதுபோன்ற ரிஸ்க் ஆன விஷயங்களில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார். தன்னை, தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் கேரக்டர்களில் நடிக்க அவர் விரும்புவதில்லை. அதே வேளையில், அவர் மிக சாதாரண கதைகளில் நடித்தாலே, அதை அவரது ரசிகர்கள் வெற்றிப்படமாக்கி விடுவதால், அவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்க அவசியமில்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அதை அவர் நடிக்க ஆரம்ப காலத்திலேயே பின்பற்றியதால், ஒரு அற்புதமான படத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார். அந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யாவுக்கு, ரசிகர்கள் மத்தியில் மற்றொரு நிக் நேம் உண்டு. அதுதான் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்த சஞ்சய் ராமசாமி. ஆனால், இந்த சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க வேண்டியவர் நடிகர் அஜீத்குமார். கஜினி படத்தின் கதை பிடித்துப் போய், நடிக்க ஒத்துக்கொண்டு சில நாட்கள் ஷூட்டிங்கிலும் பங்கேற்ற அஜீத், முதலில் சஞ்சய் ராமசாமியாக நடித்திருக்கிறார். அதன்பின் கஜினியின் மனநலம் பாதித்த கேரக்டருக்காக மொட்டையடித்துக்கொண்டு, முகத்தில் தழும்புடன் உடம்பு முழுக்க எழுதிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறியவுடன், இப்படி எல்லாம் எனக்கு நடிக்க பிடிக்காது என விலகி இருக்கிறார்.
பலமுறை அஜீத்குமாரிடம் ஏஆர் முருகதாஸ் வற்புறுத்தி கேட்டும் அவர் முடியவே முடியாது என மறுத்த நிலையில், மேலும் சில நடிகர்களிடம் அவர் கேட்க, அவர்களும் மறுத்துவிட்டனர். இந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என தானாக முன்வந்தவர்தான் சூர்யா. அதற்கு பிறகுதான், சஞ்சய் ராமசாமியாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் சூர்யா. அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்கு கஜினி ஆரம்ப புள்ளியாக அமைந்தது. இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க மறுத்ததால், அஜீத்குமார் படங்களை இயக்க ஏஆர் முருகதாஸூம் பிறகு ஆர்வம் காட்டவில்லை. அதுவே, அவர்களது விரிசலுக்கும் காரணமாகி விட்டது.





