தமிழ் சினிமாவில் சில படங்கள் எவர்கிரீன் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு படம் ரிலீஸாகி குறிப்பிட்ட நாட்கள் ஓடிவிட்டால், அடுத்த புதுப்படம் வந்துவிட்டால் இந்த படம் வேறு பகுதிகளுக்கு போய் விடும். மீண்டும் அந்த படம் அதே தியேட்டரில் திரையிட சில ஆண்டுகளாவது ஆகும்.
அந்த படத்தை மீண்டும் பார்க்க ஆசைப்பட்டால், எந்த ஊரில் எந்த தியேட்டரில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளதோ, அங்கு சென்றுதான் ரசிகர்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் அது சாட்டிலைட் டிவி சேனல்கள், ஆண்ட்ராய்டு போன்கள் இல்லாத காலகட்டத்தில், படம் பார்க்க தியேட்டர்களையே நம்பி இருக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்திலும், ஆண்ட்ராய்டு போன், ஓடிடி காலகட்டத்திலும் தியேட்டர்களில் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஏனெனில் அந்த படங்களை மீண்டும் தியேட்டர்களில் காண்பதில் ரசிகர்கள் அலாதி சுகம் அடைகின்றனர். அந்த அனுபவத்தை மீண்டும் பெற விரும்புகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த முத்து, கமல் நடித்த ஆளவந்தான், தனுஷ் நடித்த புதுப்பேட்டை, 3, வடசென்னை போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், நாடோடிமன்னன், அன்பே வா போன்ற படங்களும், சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், திருவிளையாடல் போன்ற படங்களும் இவ்வாறு ரி ரிலீஸ் செய்யப்படுவது அடிக்கடி நடக்கிறது.
அந்த வகையில், கடந்த 2007ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் நடித்த பில்லா படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை தழுவி 40 ஆண்டுகளுக்கு முன், ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா படம் எடுக்கப்பட்டது. பெரிய ஹிட் படமாக ரஜினிக்கு அது இருந்தது. 30 ஆண்டுகள் கழித்து அதே பில்லா படத்தை சிறுசிறு மாற்றங்களுடன், அஜீத்குமார் நடிப்பில் வெளியாகி, பெரிய வெற்றியை பெற்றது.
விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில், 2007ம் ஆண்டில் பில்லா படத்தில் ரஜினி கேரக்டரில் அஜீத்குமாரும், கே.பாலாஜி கேரக்டரில் பிரபுவும், ஸ்ரீப்ரியா கேரக்டரில் பயங்கரமான கிளாமரில் நயன்தாராவும் நடித்திருந்தனர். இதில் நமீதாவும் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். படம் மாஸ் ஆக பேசப்பட்டது. பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக பில்லா 2 வெளியாகி, பிளாப் ஆனது. எனினும் பில்லா முதல் பாகத்தை ஏகே ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.





