நடிகர் அஜித்திற்கு இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்போது விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படமே வெற்றி பெற்றது.
இதன் பிறகு லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார் விஜய். ஆனால் அஜித்தின் படம் தான் இன்னும் வெளியே வராமல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இத்தனைக்கும் துணிவு திரைப்படம் வெளியான பிறகு சில நாட்களிலேயே அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
விடாமுயற்சி என இதற்கு டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் லைகா நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும் மகிழ் திருமேனி இதனை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. க்ரைம் திரில்லர் திரைப்படங்களை எடுப்பதில் மகிழ் திருமேனி கெட்டிக்காரர் என்பதால், இந்த திரைப்படத்தின் மீது அப்போதே எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் படத்திற்கான சூட்டிங் செல்லவே படக்குழுவினர் நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டனர். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் அஜர்பைஜானில் சூட்டிங் நடத்த திட்டமிட்டு அங்கு பயணித்தனர். அஜித்துடன் இணைந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள சூட்டிங் பணிகளை ஹைதராபாத்தில் நடத்தி முடித்தனர். இப்படியான சூழலில் அண்மையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக அப்போது கூறினர். பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
டீசரில் அனிருத்தின் இசையும் வெறித்தனமாக இருக்க, ஏகே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்படியான சூழலில், மீண்டும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மகிழ் திருமேனி. பேட்ச் ஒர்க் மற்றும் ஒரு பாடல் காட்சி இன்னும் பெண்டிங்கில் உள்ளதாம். அதுபோக அஜித்தை வைத்தும் சில காட்சிகளை எடுக்க அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். மொத்தம் மூன்று வாரங்கள் அவர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கும் சூழலில், அஜித் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி கடைசி நேரத்தில் மீண்டும் சூட்டிங் செல்வதால், சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.





