அஜித் குமார் நடிப்பில் நடப்பாண்டே இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இதில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் ஷூட்டிங் பல நாட்கள் நடைபெற்ற நிலையில், மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
கதையிலும், அஜர்பைஜான் களம் சார்ந்த இடத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு சில புதுமைகளை காட்டி இருந்தாலும் அது திரைக்கதையில் எடுபடவில்லை. சொல்லப்போனால் படத்தின் இரண்டாம் பாதி சுமாராகவே இருந்ததாக பலரும் கூறி வந்தனர். அதிலும் அஜித்திற்கான மாஸ் காட்சிகள் மிக மிக குறைவாக இருந்ததால் அவரது ரசிகர்களுக்கு விடாமுயற்சி சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.
இதன் பிறகு அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். முந்தைய திரைப்படமான விடாமுயற்சியில் எந்த ஒரு மாஸ் காட்சிகளுமே இல்லை என்று கூறி வந்த ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட சண்டை காட்சிகளையும் மாஸ் காட்சிகளையும் வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அஜித்தை துதி பாடும் வசனங்களும், ஆக்சன் காட்சிகளுமே இருந்தன. அதுமட்டுமல்லாமல் ரெட்ரோ பாடல்களை பல இடங்களில் பயன்படுத்தியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். சொல்லப் போனால் இந்த திரைப்படம் ஒரு கலவையான விமர்சனத்தைதான் பெற்றது.
அதேசமயம் கமர்சியல் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் மசாலா படங்களுக்கு இது போதும் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்த சூழலில், திரையரங்குகளில் ஜிபியு வை பார்க்க பலரும் திரண்டனர். மைத்திரி மூவிஸ் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 300 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டியது. இப்படி குட் பேட் அக்லி வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது திரைப்படம் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்திலி மூவிஸ் நிறுவனம் தான் இதனையும் தயாரிக்க உள்ளதாம். சொல்லப்போனால் ஜிபியு படக்குழு மீண்டும் ஒன்றாக இணைகிறது என்றும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





