நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது வரை இதன் சூட்டிங் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் பட வேலைகள், தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே விடாமுயற்சி படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பெரிய நட்சத்திரம் நடிப்பதாக கூறப்படுகிறது. சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் திரில்லராக இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி எடுத்து வருகிறார்.
படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் இதுவரை வெளியிடவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு சரி, அதன்பிறகு விடாமுயற்சி குறித்து தொடர்ந்து மௌனம் காத்தே வருகிறது. ரசிகர்களும் அப்டேட் எங்கே எங்கே என்று கேட்டு அலுத்து போய்விட்டனர்.
இப்படியான சூழலில் அஜித்தின் உதவி மேலாளர் ஆன சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி சூட்டிங் பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது காரில் ஆரவுடன் அதிவேகத்தில் அஜித் செல்ல, அது விபத்துக்குள்ளாகும் காட்சி வெளியானது. இதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போயினர்.
எதற்காக இந்த அளவுக்கு அஜித் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வருத்தத்துடன் கேள்வி எழுப்பினர். இது நவம்பர் மாதம் நிகழ்ந்த சம்பவம் என்றும், இந்த விபத்தில் அஜித் மற்றும் ஆராவிற்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் படம் குறித்து பேசி இருந்த சுரேஷ் சந்திரா, அதற்கு அனிருத் இசையமைப்பதாக உறுதிப்படுத்தி இருந்தார்.
இதனிடையே சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு நடிகர் அஜித் தனது சகாக்களுடன் பைக் டூர் சென்றிருந்தார். அதில் ஆரவ் கலந்து கொண்டிருந்தார். அவர் மீது மிகுந்த அன்பு காட்டும் அஜித், ஆரவிற்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேஸ் பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒருவேளை தன்னால்தான் ஆரவ்விற்கு விபத்து ஏற்பட்டது என்பதால் அவர் மீது பாசம் காட்டும் அஜித் இப்படி செய்திருக்கிறாரோ என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





