சினிமாவில் உள்ள பெரும்பாலான ஹீரோ நடிகர்கள் தங்களது ரசிகர்களை தங்கள் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் நடித்த புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது தோரணம் கட்டுவது போஸ்டர் ஒட்டுவது தியேட்டர் முன்பு கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்வது என தங்களது புகழ் பாடும் நிலையில் அவர்களை வைத்திருக்கின்றனர்.
ஆனால் தெலுங்கு நடிகர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தனது அன்பு ரசிகர்களுக்காக ஒரு புதிய காப்பீடு திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜூன் கூறுகையில், ரசிகர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதற்காக வீணடிக்க கூடாது.
தங்களது சுய முன்னேற்றம் குடும்ப நலன் மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது அல்லு அர்ஜூன் அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்சியில் முக்கிய அம்சமாக தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை அவர் அறிவித்தார்.
அதன்படி ரசிகர் மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடும் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 900க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
சினிமாவுக்கு அப்பாற்பட்டு தனது ரசிகர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது நலனில் அக்கறை கொண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த நடவடிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவரது இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்போது நடிகர் அல்லு அர்ஜூன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் அவர் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.





