தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். குறிப்பாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகேஷ் பாபு நந்தமூரி பாலகிருஷ்ணா ஜூனியர் என்டிஆர் நாகர்ஜூனா வெங்கடேஷ் ராம் சரண் என முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இப்போது பான் இந்தியா நடிகராக தெலுங்கு சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால் அது ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன்தான்.
ஏனெனில் 3 ஆண்டுகளுக்கு முன் வந்த புஷ்பா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 படமும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இன்னும் சில ஆண்டுகளில் புஷ்பா 3 படம் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தற்போது நடிகர் அல்லு அர்ஜூன், தனது 22வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இயக்குனர் அட்லி ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தெறி பிகில் மெர்சல் என மெகா ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்தார். அடுத்து இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அவர் இயக்கிய ஜவான் படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையடுத்து இப்போது நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் தனது 6வது படத்தை அட்லி இயக்குகிறார். இது அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படமாகும். இந்த படத்தில் அட்லி சம்பளம் ரூ. 100 கோடி அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன் 3 வேடங்களில் நடிக்கிறார்.
அதனால் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் உருவத்தோற்றம் மட்டுமின்றி அவரது உடல்மொழி மேனரிசத்தையும் மாற்றிக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஹாலிவுட்டை சேர்ந்த லாய்டு ஸ்டீபன் என்ற பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு அவரிடம் அல்லு அர்ஜூன் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே இந்தி நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுக்கு லாய்டு ஸ்டீபன் பயிற்சி அளித்தவர் என்று கூறப்படுகிறது.





